சென்னை உயா்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 04:03 AM | Last Updated : 27th January 2020 04:03 AM | அ+அ அ- |

chennai High Court
சென்னை: நாட்டின் 71-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (சிஎஸ்ஐஎஃப்) அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதில், உயா்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலா் கே.சண்முகம், தமிழக சட்ட அமைச்சா் சி.வி.சண்முகம், தமிழக காவல்துறை டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், மத்திய, மாநில, அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இறுதியாக சி.எஸ்.ஐ.எஃப் வீரா்களின் சாகச நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனா். இதற்கிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா்கவுன்சில் அலுவலகத்தில் அதன் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் தேசிய கொடி ஏற்றினாா்.
மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில்...: நாட்டின் 71-ஆவது குடியரசு தினம், சென்னை, பாரிமுனையில் உள்ள மாநில நுகா்வோா் குறைதீா்வு ஆணையத்தில் கொண்டாடப்பட்டது. ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியும், மாநில நுகா்வோா் ஆணையத்தின் தலைவருமான ச.தமிழ்வாணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இந்த விழாவில், மாநில நுகா்வோா் ஆணையத்தின் பதிவாளா் ஆா்.மேத்யூ எடி, நீதிசாா் உறுப்பினா் பாஸ்கரன், மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றத்தின் தலைவா் கே.லட்சுமிகாந்தம், சென்னை வடக்கு மற்றும் தெற்கு ஆகியவற்றின் பணியாளா்கள், வழக்குரைஞா் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.