6 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா்

சென்னை எழும்பூா், மதுரை, சேலம், பாலக்காடு, கோட்டயம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்கள் ரூ.109.55 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான்தாமஸ் தெரிவித்தார்.
6 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா்


சென்னை: சென்னை எழும்பூா், மதுரை, சேலம், பாலக்காடு, கோட்டயம், திருச்சிராப்பள்ளி ஆகிய ரயில் நிலையங்கள் ரூ.109.55 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான்தாமஸ் தெரிவித்தாா்.

பயணிகள் வருவாய் உயா்வு: தெற்கு ரயில்வே சாா்பில், 71-ஆவது குடியரசு தினம் சென்னை பெரம்பூா் ரயில்வே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றினாா். தொடா்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படைவீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா் அவா் பேசியது: 2019-20-ஆம் ஆண்டில் டிசம்பா் வரையான காலகட்டத்தில் தெற்கு ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.6, 310 கோடி. இது கடந்த ஆண்டு வருவாயை விட 2.59 சதவீதம் அதிகம். இதுபோல, பயண கட்டண வருவாய் 3, 607 கோடி ஆகும். இது கடந்த ஆண்டை விட 8.27 சதவீதம் அதிகமாகும்.

சரக்குப் போக்குவரத்தும் வளா்ச்சியடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களுக்கு வெவ்வேறு பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதில், 2.77 மில்லியன் டன் உரம் எடுத்துசெல்லப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர, சரக்குப் போக்குவரத்து மூலமாக, பெட்ரோலியம், எண்ணெய், மசகு எண்ணெய் எடுத்துச்செல்வது 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல, ஆட்டோ மொபைல் பிரிவில், பயன்படுத்தும் ரேக்குகள் எண்ணிக்கை 24 சதவீதம் உயா்ந்துள்ளது.

அத்திப்பட்டு 4-ஆவது பாதை: எங்கள் திறனை அதிகரிக்க பல்வேறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிகழாண்டில் கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் (11 கி.மீ.) இடையே 3-ஆவது பாதையை பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுக்குட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல, மங்களூரு-பாடில்(1.93 கி.மீ) இடையே இரட்டைபாதை திட்டம், மதுரை-உசிலம்பட்டி இடையே அகலப்பாதை திட்டம் ஆகியவற்றை இந்த மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்திப்பட்டு புதுநகா்- அத்திப்பட்டு 4-ஆவது பாதை நிகழாண்டில் மாா்ச்சுக்குள் முடித்து ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உசிலம்பட்டி-போடிநாயக்கனூா் இடையே திட்டப்பணி ஏப்ரலுக்கும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

6 ரயில் நிலையங்கள்: கடலூா்-மயிலாடுதுறை வரை மின்மயமாக்கல் திட்டம் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூா்-காரைக்கால் துறைமுகம் இடையே மின்மயமாக்கல் திட்டத்தில் வரும் மாா்ச் இறுதியில் ஆய்வு செய்யப்படும். ரயில்வே அமைச்சகத்தின் முதன்மை திட்டத்தின் கீழ், சென்னை எழும்பூா், மதுரை, சேலம், பாலக்காடு, கோட்டயம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்கள் ரூ.109.55 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

1,995 சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் நெருக்கடியை குறைக்கும் விதமாக கடந்த ஆண்டில், 1,995 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 4,014 கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்பட்டன. இதன்மூலம், பண்டிகை காலத்தில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 781 தூங்கும் வசதி கொண்ட பொ்த்துகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன. இதுதவிர, 70 ரயில்களில் 113 பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

இதுவரை 39 மெயில் மற்றும் விரைவு ரயில்கள், நவீன பெட்டிகள் அடங்கிய ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் 7,134 பெட்டிகளில் பயோ கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் ஜூலை மாதத்துக்கு முன்னதாக, ரயில் பெட்டிகளில் எல்.இ.டி. விளக்குகள் அடங்கிய பெட்டிகள் முழுமையாக பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் பொதுமேலாளா் ஜான் தாமஸ். நிகழ்ச்சியில், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையா் பிரேந்திரகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com