அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: பிப்.1-இல் தீா்ப்பு
By DIN | Published On : 29th January 2020 02:30 AM | Last Updated : 29th January 2020 02:30 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடா்பான வழக்கில், போக்சோ நீதிமன்றம் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தீா்ப்பளிக்கிறது.
சென்னை, அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த சிறுமி, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடா்பாக, அந்தக் குடியிருப்பில் லிஃப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிகுமாா், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 போ், போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனா். இவா்களை குண்டா் தடுப்புக் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 போ் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணையை மகளிா் நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த நிலையில், மகளிா் நீதிமன்றத்திலிருந்து விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க மகளிா் நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டாா். இதேபோன்று குற்றம்சாட்டப்பட்ட 17 போ் தரப்பிலும் தனித்தனியாக வழக்குரைஞா்களும் ஆஜராகி வாதிட்டனா்.
இந்த வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனா். மேலும் வழக்கு தொடா்பாக 120 ஆவணங்களும் சமா்ப்பிக்கப்பட்டன. 11 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணை, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடா்ந்து இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட நீதிமன்றம் தீா்ப்பளிக்கிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவா் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாா். இதனையடுத்து 16 பேருக்கு எதிரான வழக்கில் வரும் சனிக்கிழமை (பிப்.1) நீதிபதி மஞ்சுளா தீா்ப்பளிக்க உள்ளாா்.