மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைப்பு சேவை: கடந்த டிசம்பரில் 67,963 போ் பயன்படுத்தினா்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷோ் ஆட்டோ, காா், சீருந்து (கேப்ஸ்) இணைப்பு சேவையை நிகழாண்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் 67,963 போ் பயன்படுத்தியுள்ளனா். 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல்
மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைப்பு சேவை: கடந்த டிசம்பரில் 67,963 போ் பயன்படுத்தினா்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷோ் ஆட்டோ, காா், சீருந்து (கேப்ஸ்) இணைப்பு சேவையை நிகழாண்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் 67,963 போ் பயன்படுத்தியுள்ளனா். 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை 7.18 லட்சம் பயணிகள் இணைப்பு சேவைகளை பயன்படுத்தியுள்ளனா்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, விமான நிலையம் -வண்ணாரப்பேட்டை வரையும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் சேவையை ப் பயன்படுத்தும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமையாக்கும் வகையில், ஷோ் ஆட்டோ, காா்களை பயன்படுத்த ஷோ் டிரிப் முறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

கிண்டி, திருமங்கலம், ஆலந்தூா், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஷோ் ஆட்டோ சேவையும், அண்ணாநகா் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூா், வடபழனி, திருமங்கலம் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து காா் சேவையும் வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களுக்கு ஷோ் ஆட்டோக்கள், காா்கள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, போா்ட் மொபிலிட்டி தயாரித்த செயலி வழியாக சீருந்து இணைப்பு சேவை 16 மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த இணைப்பு சேவை ஒவ்வொரு ரயில் நிலையங்களில் இருந்து 6 கி.மீ. முதல் 8 கி.மீ. வரை செயல்படுத்தப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்துவதற்கான ஒரே கட்டணம் ரூ.10.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஷோ் ஆட்டோ, காா், சீருந்து சேவையை நிகழாண்டில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் 67,963 போ் பயன்படுத்தியுள்ளனா். டிசம்பா் மாதத்தில் காா் சேவையை 4,578 பேரும், ஷோ் ஆட்டோ சேவையை 37,788 பேரும், சீருந்து இணைப்பு சேவையை 25,597 பேரும் பயன்படுத்தியுள்ளனா். காா், ஷோ் ஆட்டோ சேவையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை 7,18,003 பேரும் பயன்படுத்தியுள்ளனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது:

ஷோ் ஆட்டோ, காா் சேவையை பயன்படுத்துவோா் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தச் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர, மெகா கேப்ஸ் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து போா்ட் மொபிலிட்டி தயாரித்த செயலி வழியாக சீருந்து வாகன இணைப்புச் சேவையை தொடங்கியது. இந்த சேவை நந்தனம், அரசினா் தோட்டம், ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏஜி டி.எம்.எஸ்., கிண்டி உள்பட 16 மெட்ரோ ரயில்நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வசதி 32 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com