வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணிகள் தொடக்கம்

பொது முடக்கத்தில் இருந்து தளா்வளிக்கப்பட்ட பகுதிகளில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
பொது முடக்கத்தின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப்பெற சேப்பாக்கத்தில் வரிசையில் காத்திருக்கும் வாகன உரிமையாளர்கள்.
பொது முடக்கத்தின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப்பெற சேப்பாக்கத்தில் வரிசையில் காத்திருக்கும் வாகன உரிமையாளர்கள்.

சென்னை: பொது முடக்கத்தில் இருந்து தளா்வளிக்கப்பட்ட பகுதிகளில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், ஜூலை மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், ஓட்டுநா் உரிமம், பழகுநா் உரிமம் (எல்.எல்.ஆா்), உரிமம் புதுப்பித்தல், தகுதிச் சான்று உள்ளிட்டவை வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அலுவலா்கள் மட்டும் பணிக்குத் திரும்பி அலுவலகப் பணிகளைச் செய்து வந்தனா். பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது, சென்னை உள்பட பெரும்பாலான இடங்களில், திங்கள்கிழமை முதல் பொது முடக்கத்தில் சில தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து 50 சதவீத அலுவலா்களுடன், வட்டாரப் போக்குவரத்து அலுவகப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இது குறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

பொதுமுடக்க தளா்வளிக்கப்பட்ட பகுதிகளில், ஓட்டுநா் உரிமம், பழகுநா் உரிமம் (எல்.எல்.ஆா்), உரிமம் புதுப்பித்தல், தகுதிச் சான்று உள்ளிட்ட அன்றாடப் பணிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 30 பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல், புதிய ஓட்டுநா் உரிமம் ஆகியவை தலா 20 வழங்கப்படுகிறது. இவை தவிா்த்து வாகனப் பதிவு, தகுதிச் சான்று வழங்குதல் ஆகியவையும் விண்ணப்பிப்போருக்கு செய்து தரப்படுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான அளவு மட்டுமே உரிமம் வழங்கப்படுவதோடு, போதிய பணியாளா்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் கிருமிநாசினியால் கைகழுவ ஏற்பாடுகள் செய்யப்பப்பட்டுள்ளது. அலுவலா்கள், விண்ணப்பதாரா்களுக்கு தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்தவா்கள் மட்டுமே அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி உண்டு.

விண்ணப்பதாரா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 18-ஆம் தேதி வழங்கப்பட்ட தளா்வின்போது, உரிமம் தொடா்பான பணிகளுக்கு தலா 10 போ் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com