சிலை கடத்தல் வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரம்: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

சிலை கடத்தல் வழக்குகளில் ஆவணங்கள் மாயமானது குறித்த வழக்கில் தமிழக காவல்துறை டிஜிபி உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
சிலை கடத்தல் வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரம்: டிஜிபி பதிலளிக்க உத்தரவு


சென்னை: சிலை கடத்தல் வழக்குகளில் ஆவணங்கள் மாயமானது குறித்த வழக்கில் தமிழக காவல்துறை டிஜிபி உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம், தமிழகத்தில் உள்ள பழமையான சாமி சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிலை கடத்தலில் அரசியல்வாதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்குத் தொடர்பு உள்ளது. 

இந்த நிலையில், சிலை கடத்தல் குறித்து பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் கேஸ் டைரி எனப்படும் விசாரணை விவர ஆவணங்களை காணவில்லை. இதன் காரணமாக, இந்த வழக்குகள் கைவிடப்பட்டு, அந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனர். எனவே, வழக்கு ஆவணங்கள் மாயமானது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்தினால், அரசியல்வாதிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. 

எனவே, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, 41 வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மாயமானது குறித்து உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும். 

மேலும், விசாரணை ஆவணங்களைக் காணவில்லை என்ற அடிப்படையில் இந்த 41 வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டு வர தமிழக காவல்துறை டிஜிபிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், விசாரணை விவர ஆவணங்கள் மாயமான வழக்குகளில் விசாரணையை முடித்து வைத்த காவல் கண்காணிப்பாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அரவிந்த்பாண்டியன், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், காவல்துறை அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

எனவே, இந்த மனு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக காவல்துறை டிஜிபி, சிலை கடத்தல் பிரிவு 4 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com