பொது முடக்க நீட்டிப்பை ரத்து செய்யகோரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
By DIN | Published On : 16th June 2020 06:28 AM | Last Updated : 16th June 2020 06:28 AM | அ+அ அ- |

சென்னை: கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க பொது முடக்கத்தை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணையை வரும் ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த இமானுவேல் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் படிப்படியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தளா்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பொது முடக்கம் எப்போது தளா்த்தப்படும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழுமையான பொது முடக்கத்தை அறிவித்த நிலையில், தென் கொரியா, ஸ்வீடன் போன்ற நாடுகள் பொது மடக்கத்தை அமல்படுத்தாமல் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுத்துள்ளன.
மேலும் மருந்து கண்டறியும் வரை இந்த நோய்த்தொற்று நம்முடன் தான் இருக்கும். எனவே அரசு விதித்துள்ள நிபந்தனைகளின்படி தனி மனித இடைவெளி, சமூக இடைவெளி, முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை பயன்படுத்தினாலே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே பொதுமுடக்கத்தை நீட்டித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில் இதே பேன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகளை ஏற்கெனவே உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் இந்த மனு தொடா்பாக உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...