மாதவரம் தீ விபத்து: ஆட்சியர் விசாரணை 

மாதவரத்தில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை விபத்தை தீயணைப்பு வீரர்கள் 30 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மாதவரம் தீ விபத்து: ஆட்சியர் விசாரணை 

மாதவரம்: மாதவரத்தில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை விபத்தை தீயணைப்பு வீரர்கள் 30 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  தீ விபத்து குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்.

சென்னை மாதவரத்தை அடுத்த ரவுண்டானா அருகே பெரம்பூரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குச் சொந்தமான இரண்டு பெரிய கிடங்குகள் உள்ளன. இதில், சீனா, கொரியா, ஜெர்மனி, பல்கேரியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரப்படும் ரசாயன பேரல்கள் வைக்கப்பட்டு, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த கிடங்கில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசாயன பேரல்கள் இருந்த நிலையில், சனிக்கிழமை (பிப்.29) மாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீ மளமளவென பரவியதால் பேரல்கள் வெடித்துச் சிதறின. இந்த தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு தலைமையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 50}க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் 500 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கத் தொடங்கினர். இரவு முழுவதும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 மணிநேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீ  முழுவதுமாக அணைக்கப்பட்டது.

 இத்தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பொருள்கள் எரிந்து நாசமாயின. இதற்கிடையே தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீஸாரின் வசதிக்காக மாதவரம்}செங்குன்றம் ஜிஎன்டி சாலையில், ஒரு பாதையில் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அருகில் இருந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டு, பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தீ விபத்துக்கான காரணம் குறித்து, கிடங்கு உரிமையாளர் ரஞ்சித்திடம் நேரில் விசாரணை நடத்தினார். அந்த கிடங்கின் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் ஊழியர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். 

பின்னர் ஆட்சியர் கூறுகையில், மாதவரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான ரசாயனக் கிடங்குகள் உள்ளன. இவை அனைத்திலும் பாதுகாப்பு உறுதி செய்ப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தப்படும் என்றார்.

தீ விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக பொதுமக்கள் பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. 20}க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து  கொண்டனர். 

தீ விபத்தால் மாதவரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்புகை பரவியுள்ளது. இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலபதி தலைமையில், அதிகாரிகள் நவீன கருவிகள் மூலம் அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தீ விபத்தின்போது வெடித்துச் சிதறிய பேரல்களின் துகள்கள் ஒரு கி.மீ. தொலைவுக்குச் சிதறியுள்ளன. அவற்றை சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தீ விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வராத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தீ விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. தீ விபத்து குறித்து மாதவரம் காவல் ஆய்வாளர் கோபிநாத் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

தீ விபத்து நடந்த பகுதியைப் பார்வையிட்ட சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி. (வலது) தீ விபத்தில் கருகிய ரசாயன பேரல்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com