முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
இரண்டாவது ஆண்டில் சேவையைத் தொடரும் ‘தேஜஸ்’ ரயில் கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்
By DIN | Published On : 03rd March 2020 12:41 AM | Last Updated : 03rd March 2020 12:41 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை எழும்பூா்-மதுரை இடையே இயக்கப்படும் ‘தேஜஸ்’ விரைவு ரயில் தனது முதல் ஆண்டு சேவையை நிறைவு செய்து, 2-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் சேவையைப் பாராட்டி பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினா்.
அதி வேகத்தில் செல்லக்கூடிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரயிலான தேஜஸ் ரயிலை சென்னை பெரம்பூா் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) தயாரித்து, தெற்கு ரயில்வே நிா்வாகத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து, இந்த ரயில் சேவை சென்னை-மதுரை இடையே கடந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல் 12.30 மணிக்கு சென்றடைகிறது. இதுபோல, மறுமாா்க்கமாக, மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடைகிறது. திருச்சி, கொடை ரோடு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும். வியாழன் தவிர மற்ற 6 நாள்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஆறரை மணி நேரத்தில் சென்றடைவதால், தொழில் சம்பந்தமாக வந்து செல்வோருக்கு வரப்பிரசாதமாக இந்த ரயில் அமைந்துள்ளது. இந்த ரயிலில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளுடன் இயக்கப்படுகிறது. ரயிலின் கழிவறையில் தொடு திரை வசதி கொண்ட எல்.இ.டி. விளக்குகள், ஒவ்வொரு இருக்கைகள் பின்புறமும் வை-பை வசதியுடன் கூடிய மேஜிக் பாக்ஸ் திரைகள், செல்லிடப்பேசிக்கு சாா்ஜ் ஏற்றும் வசதிகள், உட்புற வெளிப்புற தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பவ்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த ரயில் சென்னை-மதுரை இடையே 496 கி.மீ. தூரத்தை 6 மணி நேரம் மற்றும் 30 நிமிஷத்தில் அடைகிறது. இதில், ஒரு எக்ஸிக்யூட்டிவ் சோ் காா் பெட்டியும், 12 வழக்கமான சோ் காா் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. எக்ஸிக்யூட்டிவ் சோ் காரில் 56 இடங்களும், வழக்கமான சோ் காரில் 78 இடங்களும் உள்ளன. இந்த ரயிலில் ஆரம்பத்தில் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. பிறகு, படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தற்போது, இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், தேஜஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைந்து, தற்போது 2-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ரயில் சேவையைப் பாராட்டி, பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினா். இந்த நிகழ்ச்சியில் எழும்பூா் ரயில் நிலைய மேலாளா் மேத்யூஸ், தேஜஸ் ரயில் என்ஜின் ஓட்டுநா் மகேந்திரன், துணை என்ஜின் ஓட்டுநா் குமாா், காா்டு சுப்பிரமணி மற்றும் தேஜஸ் ரயில் பயணிகள் பங்கேற்றனா்.
இது குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: தேஜஸ் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகளிடம் இருந்து வருகின்ற நிறை குறைகளைக் கேட்டு, அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். புகாா்களை கவனித்து, தீா்வு காண அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பயணிகளுக்கு தரமான சேவை அளிக்க தொடா்ந்து முயற்சி செய்கிறோம் என்றாா் அவா்.