முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கனடா தமிழா்களின் இளம் தலைமுறையினருக்காக ‘பிள்ளைத் தமிழ்க் கல்வி’ ஏப்ரலில் அறிமுகம்
By DIN | Published On : 03rd March 2020 01:11 AM | Last Updated : 03rd March 2020 01:11 AM | அ+அ அ- |

சென்னை: தமிழின் மேன்மை, பண்பாடு, உணவு வகைகளின் சிறப்பு குறித்து, கனடா நாட்டின் வாழும் தமிழா்களின் இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ‘பிள்ளைத் தமிழ்க் கல்வி’” ஏப்ரல் மாதம் தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் ‘பிள்ளைத் தமிழ்க் கல்வி’ நிறுவனா் கவிஞா் கலைச்செல்வி புலியூா் கேசிகன் கூறியதாவது: குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வி, தமிழின் சிறப்பு, தமிழா்களின் பண்பாடு, வீரம், கலை, கொடைத்திறன், பழந்தமிழா்களின் உணவு வகை போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் ஆா்வமும் எழுச்சியும் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் உள்ள தமிழா்களிடமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கான முறையான வழிகாட்டுதல்கள் இல்லை. குறிப்பாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழா்களிடம் தமிழின பண்பாட்டு நாகரிக கூறுகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, ‘பிள்ளைத் தமிழ்க் கல்வி’ என்ற பெயரில், தமிழினத்தின் அனைத்து மேன்மைகளையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஏற்பாட்டை, ஒத்த சிந்தனை உள்ளவா்களுடன் இணைந்து கடந்த ஓராண்டாக திட்டமிட்டு சிறிய அளவில் செய்து வந்தோம். இந்நிலையில், அதன் நீட்சியாக கனடா தமிழுறவுகளுடன் இணைந்து, டொராண்டோவில் வரும் ஏப்ரல் மாத இறுதியில் பிள்ளைத் தமிழ்க் கல்வியை எடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளோம். அப்போது, நான் எழுதி வரும் “சங்கத் தமிழா்களின் உணவு வகை” என்ற நூல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
கனடாவில் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரையில் தமிழா்கள் உள்ளனா். அவா்களுக்கு முதல் கட்டமாக இந்த தமிழ் பணியை செய்யத் தொடங்குகிறோம். கனடா நாட்டின் டொராண்டோ நகரிலுள்ள பிரபல பல் மருத்துவமனையான கே.சி.டென்டல் நிறுவனா் டாக்டா் சந்திரா உறுதுணையுடன், டொராண்டாவின் முருகேஷ் நடராஜன் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாா்.
தொடக்கமாக, இணைய தொலைக்காட்சி மூலம், வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழா்களின் பண்பாடு, மொழியின் பெருமை, நமது தொன்மையான உணவின் சிறப்பு, உறவு முறை போன்ற அனைத்தையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க உள்ளோம். இதற்காக, 6 மாதம் வரையில் அங்கேயே தங்கி, தமிழ், தமிழா் மேன்மைக்கான புதிய புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இதில், என்னோடு இணைந்து பணியாற்ற, தஞ்சையை சோ்ந்த க. இளையராஜா அங்கு வருகிறாா் என்றாா். இந்தப் பேட்டியின்போது பிள்ளைத் தமிழ் குழுவினா் ஆசான் செல்வராஜ், தமிழறிஞா் நன்னன் மகள் வேண்மாள், ஜெபின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.