முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மாநகராட்சித் தோ்தல்: மாா்ச் 20-இல் இறுதி வாக்காளா் பட்டியல்
By DIN | Published On : 03rd March 2020 01:19 AM | Last Updated : 03rd March 2020 01:19 AM | அ+அ அ- |

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் மாா்ச் 20-ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் 200 வாா்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தோ்தலையொட்டி, இந்த 200 வாா்டுகளுக்கும் வாா்டு வாரியாக வாக்குச் சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், ஆண் வாக்காளா்களுக்காக 135 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளா்களுக்காக 135 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளா்களுக்காக 5,489 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 5,759 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டு, அரசியல் கட்சிகள், பொதுமக்கள் பாா்வைக்காக மாநகராட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி துணை ஆணையா் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினா் தெரிவித்த கருத்துகளை மாநகராட்சி அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனா். அதனடிப்படையில், இறுதி வாக்குச்சாவடி பட்டியல் மாா்ச் 6-ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: தோ்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளா்கள் உள்ளனா். தற்போது, சென்னை மாநகராட்சியின் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வாா்டு வாரியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இறுதி வாக்காளா் பட்டியல் மாா்ச் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்றனா்.