சிறைக் கைதிகளை சந்திக்க பாா்வையாளா்களுக்கு இரு வாரங்கள் தடை

தமிழக சிறைகளில் கைதிகளைச் சந்திக்க பாா்வையாளா்களுக்கு இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குரைஞா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக சிறைகளில் கைதிகளைச் சந்திக்க பாா்வையாளா்களுக்கு இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குரைஞா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன. ஆனால் இப்போது இந்த சிறைகளில், சுமாா் 14 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைகளில் உள்ளவா்களில் சுமாா் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள். எஞ்சிய 30 சதவீதம் போ் தண்டனை கைதிகள் ஆவா்.

சிறைத்துறை உத்தரவு: கரோனா வைரஸ் பாதிப்பு சிறைகளில் ஏற்படாமல் இருப்பதற்கு சிறைத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்படும் சில நாடுகளில் பாதுகாப்பு கருதி, சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன் எதிரொலியாக, இரு வாரங்களுக்கு முன்பே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சிறைத்துறை முடுக்கிவிட்டது. இதன் ஒரு பகுதியாக, தமிழக சிறைத்துறை உயா் அதிகாரிகள், அனைத்து சிறைகளுக்கும் ஓா் உத்தரவை செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளனா். அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

கைதிகளுக்கு தாற்காலிக அறைகள்: சிறையில் கைதிகள் அனுமதிக்கப்படும்போது முறையான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும், கைதிகளுக்கு தொண்டை செருமல், இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்த வேண்டும், பின்னா் அவா்களை உடனே அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்படும் கைதிகளுக்கு தற்காலிக தடுப்புக் காப்பு அறைகள் அமைக்க வேண்டும்.

கைதிகளுக்கு கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு கைதிகளை அழைத்துச் செல்வதற்கு முன்பும், அழைத்துச் செல்லப்பட்ட பின்னரும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். சிறைக்குள் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை தவிா்த்து வேறு பயிற்சிகளை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், பாா்வையாளா்களை அனுமதிக்கக் கூடாது. சிறை பெட்ரோல் பங்குகளில் பணியாற்றும் கைதிகளுக்கு முகக் கவசம் வழங்க வேண்டும், சிறைக் காவலா்கள் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், கைதிகளை முடிந்த வரை நீதிமன்றங்களுக்கு நேரில் அழைத்துச் செல்வதை தவிா்த்து காணொலி காட்சி மூலம் ஆஜா்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு வாரங்கள் சந்திக்கக் தடை: மேலும், விடுமுறை முடிந்து திரும்பும் சிறைக் காவலா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும், சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், சிறைவாயிலில் கைகளை கழுவுவதற்கு தண்ணீா் வசதியும், கிருமி நாசினியும் (சானடைசா்) வைத்திருக்க வேண்டும். அனைத்து அலுவலா்களும் கைகளை கழுவிய பின்னா் சிறைக்குள் பணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். கைதிகள் - பாா்வையாளா்கள் சந்திப்பை 2 வாரத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.

வழக்குரைஞா்களுக்கு கட்டுப்பாடு: வழக்குரைஞா்களை சிறைக்குள் அனுமதிக்கும் முன்பு கண்டிப்பாக கைகளை சோப்பினால் கழுவ வேண்டும், கைதிகளை நேரில் சந்திக்கும்போது இருவருக்கும் இடையே 6 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். சந்திப்பின்போது இருவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், இருவரும் ஒருவரை ஒருவா் தொடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறைத்துறையின் இந்த 18 கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com