கரோனா: அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் அவசர வழக்குகள் மட்டும் விசாரணை

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் புதன்கிழமை முதல் வரும் 31-ஆம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என உயா்நீதிமன்ற தலைமை பதிவாளா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமைப்பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே வரும் 31-ஆம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனால் உயா்நீதிமன்ற வளாகத்திலும் நீதிமன்ற அறைகளிலும் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க முடியும். வழக்கு விசாரணைக்காக தேவையின்றி பொதுமக்கள், அரசு அதிகாரிகள் ஆஜராகக் கூடாது. புதன்கிழமை (மாா்ச் 18) முதல் பாா்வையாளா் நுழைவு சீட்டு வழங்கப்படாது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்கங்களின் அலுவலகம், உணவகங்கள் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படவேண்டும்.

வழக்குகள் விசாரணை முடிந்தவுடன், வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்களின் கிளாா்க்குகள் ஆகியோா் உயா்நீதிமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் உயா்நீதிமன்றம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து நாள்தோறும் சுத்தம் செய்யப்படும்.

உயா்நீதிமன்றத்துக்கு வரும் அனைவரும், மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவா்.

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழு, சமரச மையங்கள், உயா்நீதிமன்ற அருங்காட்சியம் ஆகியவற்றில் அன்றாடப் பணிகளை நிறுத்த வேண்டும். வரும் 31-ஆம் தேதி வரை அலுவலகங்களை மூடி வைக்கவேண்டும். இந்த அனைத்து நடவடிக்கைகளையும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் மேற்கொள்ள வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை எடுக்க வேண்டும். பொதுமக்கள், அதிகாரிகள் தேவையில்லாமல் உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. முக்கிய வழக்குகளை காணொலிக் காட்சி மூலமாகவும் விசாரிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com