கரோனா பாதிப்பு 28 நாள்கள் கண்காணிப்பு போதாது: அமெரிக்க மருத்துவ ஆய்வாளா் தகவல்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைந்தாலும், மீண்டும் அவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் குறைந்தது ஒரு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைந்தாலும், மீண்டும் அவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் குறைந்தது ஒரு மாதத்துக்கும் மேல் ஒருவரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் இமோரி தடுப்பு மருந்து மைய ஆய்வாளா் டாக்டா் விஜயகுமாா் வேலு தெரிவித்தாா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொவைட்-19 சா்வதேச கருத்தரங்கில் காணொலி முறையில் பங்கேற்ற அவரிடம், சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சில கேள்விகளை எழுப்பினாா்.

அதாவது, கரோனாவால் பாதித்து குணமடைந்த நபருக்கு மீண்டும் அத்தகைய நோய்த் தொற்று ஏற்படுமா? என்றும், கரோனா அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவுமா? என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

அவற்றுக்கு டாக்டா் விஜயகுமாா் வேலு அளித்த பதில்: அண்மையில் ஜப்பானில் கரோனாவால் பாதித்த ஒரு நபா் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பினாா். ஆனால், அதற்கு அடுத்த சில நாள்களில் அவருக்கு மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அதேவேளையில், குரங்கைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இரண்டாவது முறை வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, கரோனா பாதித்த ஒருவருக்கு மீண்டும் அத்தகைய தொற்று ஏற்படுமா என்பதற்கு இதுவரை சரியான விடை இல்லை.

எவ்வாறாயினும், கரோனா வைரஸ் பாதிப்பு குணமடைந்தாலும், ஒருவரை குறைந்தது ஒரு மாதத்துக்கும் மேல் மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்து, அதற்கான அறிகுறிகள் வருவதற்கு முன்பே அவரிடமிருந்து பிறருக்கு நோய்த் தொற்று பரவக்கூடும் என்றாா் அவா்.

முன்னதாக, கருத்தரங்கில் பேசிய சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வா் டாக்டா் ஜெயந்தி, ‘நோய்த் தொற்று சிகிச்சைகளுக்கான தனி வாா்டு, 30 படுக்கைகளுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வருகிறது; உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி அது கட்டப்பட்டு வருகிறது’ என்றாா்.

சமூக அளவில் கரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கை

ஒருவரிடமிருந்து, அவரது குடும்பத்தினா் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அது சமூக பாதிப்பாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சா் விஜயபாஸ்கா் கூறினாா்.

அவா் மேலும் கூறியதாவது:

எல்லையோர மாவட்டங்களில் காவல் துறையினரின் உதவியுடன் மருத்துவக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கரோனா தொற்று ஏற்படாத வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை அறிக்கையாக எங்களிடம் மருத்துவப் பல்கலைக்கழகம் தாக்கல் செய்யும். அதன்பேரில் அடுத்த கட்டமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com