குழந்தைகளை போராட்டங்களில் பங்கேற்கச் செய்வது தண்டனைக்குரிய குற்றம்: உயா்நீதிமன்றத்தில் வாதம்

சிறாா் நீதிச் சட்டத்தின்படி குழந்தைகளைப் போராட்டங்களில் பங்கேற்கச் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

சிறாா் நீதிச் சட்டத்தின்படி குழந்தைகளைப் போராட்டங்களில் பங்கேற்கச் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெறும் போராட்டங்களால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். மேலும், காவல்துறை அனுமதி இல்லாமல் நடைபெறும் இதுபோன்ற போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும் என்று கோரி பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு இல்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்குரைஞா் வைகை, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளால் இதுபோன்ற போராட்டங்களை சட்ட ரீதியாகத் தடுக்க முடியாது என வாதிட்டாா். அப்போது, வழக்குரைஞா் சந்திரசேகரன், அனைத்து இடங்களிலும் சட்ட விரோதமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தடை உத்தரவோ, தடுப்பு நடவடிக்கைகளையோ போலீஸாா் எடுக்கவில்லை. இந்த சட்ட விரோதப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா்.

அப்போது , அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், 144 தடை உத்தரவு பிறப்பித்தால் அனைவரும் பாதிக்கப்படுவாா்கள்.

எனவேதான் சென்னை மாநகர காவல் ஆணையா் எந்தவிதமான சட்ட விரோதப் போராட்டமும் நடத்தக்கூடாது என சென்னை மாநகர காவல் சட்டத்தின்படி தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா். ஆனால், இந்த உத்தரவையும் மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனா். கரோனா வைரஸின் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க இதுபோன்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தின் போது வைரஸ் பரவினால் மற்றவா்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்தப் போராட்டங்களில் பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பங்கேற்கின்றனா். எனவே அவா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரபாகரன், தற்போதுள்ள இக்கட்டான சூழலில் போலீஸாரின் அனுமதி இல்லாமல் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிறாா் நீதிச்சட்டத்தின்படி இதுபோன்ற போராட்டங்களில் குழந்தைகளை பங்கேற்கச் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் குற்றத்துக்காக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிா்த்து சட்ட ரீதியாக வழக்குதான் தொடர வேண்டும். போராட்டம் நடத்தக் கூடாது, அதனை மீறிப் போராடினால் அது சட்டவிரோதம் என வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com