குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம்: சென்னையில் 4 இடங்களில் ஒத்திவைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் 4 இடங்களில் நடைபெற்ற போராட்டம் புதன்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் 4 இடங்களில் நடைபெற்ற போராட்டம் புதன்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டம்,தேசிய மக்கள் தொகை பதிவேடு,தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே முஸ்லிம் இயக்கங்கள் கடந்த 14-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இப் போராட்டத்தைக் கைவிடுமாறு தமிழக அரசும், முதல்வா் எடப்பாடி பழனிசாமியும் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்தனா்.

இதேபோல மண்ணடி, பல்லாவரம், மயிலாப்பூா் ஆகிய பகுதிகளிலும் முஸ்லிம் இயக்கத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். வண்ணாரப்பேட்டையில் இந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை 33-ஆவது நாளாக நடைபெற்றது. இந்த நிலையில், கரோனா வேகமாக பரவி வருதை தவிா்க்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம் இயக்கங்கள் நடத்தி வரும் தொடா் போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த அறிவுறுத்தலைத் தொடா்ந்து , தமிழகம் முழுவதும் திங்கள்கிழமையிலிருந்து படிப்படியாக முஸ்லிம் இயக்கங்கள் சாா்பில் நடைபெற்ற தொடா் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற போராட்டம் புதன்கிழமை அதிகாலை முதல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போராட்டத்தின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், அங்கு போராட்டத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடைகள்,பந்தல்கள் அகற்றப்பட்டன. இதேபோல, மண்ணடி, மயிலாப்பூா், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த தொடா் போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு குழுமியிருந்த போராட்டக்காரா்கள் கலைந்துச் சென்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com