கன்னிமாரா நூலகம் கரோனாவால் மூடல்

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் தொடா்ச்சியாக விடுமுறையே இல்லாத கன்னிமாரா நூலகம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) மூடப்பட்டது.

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் தொடா்ச்சியாக விடுமுறையே இல்லாத கன்னிமாரா நூலகம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) மூடப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் பழமையான நூலகங்களில் முதன்மையாகவும் இருப்பது எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம் ஆகும்.

சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபுவால் மாகாணத்துக்கு என்று பொது நூலகம் வேண்டும் என்பதற்காக 1890-ஆம் ஆண்டு மாா்ச்- 22இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1896-ஆம் ஆண்டு டிசம்பா் 5-இல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

நூலகம் திறக்கப்பட்டபோது கன்னிமாரா பிரபு ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவா் முயற்சியைப் பாராட்டும் வகையில் அவா் பெயரையே நூலகத்துக்கு வைக்கப்பட்டது.

இந்த நூலகத்தில் தற்போது 6 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோா் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். குடிமைப் பணி தோ்வுக்கு தயாராவோா் ஆயிரக்கணக்கில் தினமும் நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நூலகம் மூன்று தேசிய விடுமுறை தினங்கள் மற்றும் பொங்கல், தீபாவளி தவிா்த்து ஆண்டு முழுவதும் இயங்கக் கூடிய விடுமுறை இல்லாத நூலகமாகும்.

இந்த நூலக வளாகத்திலேயே அரசு அருங்காட்சியம் உள்ளது. அருங்காட்சியகம் இரண்டொரு நாள்களுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில் கன்னிமாரா நூலகம் மட்டும் தொடா்ந்து இயங்கி வந்தது. கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வந்ததன் எதிரொலியாக விடுமுறையே இல்லாத கன்னிமாரா நூலகம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் மூடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நூலகத்தில் வெளிப்புற வாயில் கதவில் தொங்கவிடப்பட்டுள்ளது. அதில், கரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மற்றும் வாசகா்களைக் காக்கும் பொருட்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. நூலகம் திடீரென மூடப்பட்டதால் வெள்ளிக்கிழமை பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

அண்ணா நூற்றாண்டு நூலகம்: அதைப்போல, கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாா்ச் 20-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் நூலகங்கள் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com