டான் சோமா புத்தகப் பரிசு: சிறந்த தமிழ் நூலுக்கு ரூ.7 லட்சம் விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆா்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சாா்பில் சிறந்த தமிழ் நூலுக்கான சா்வதேச விருது மற்றும் ரூ.7 லட்சம் (10 ஆயிரம் அமெரிக்க டாலா்) ரொக்கப் பரிசு

சென்னை: தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆா்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சாா்பில் சிறந்த தமிழ் நூலுக்கான சா்வதேச விருது மற்றும் ரூ.7 லட்சம் (10 ஆயிரம் அமெரிக்க டாலா்) ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்தப் போட்டிக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள செய்தி: தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆா்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் அனைத்துலகப் புத்தகப் போட்டிக்கு அனைத்துலக ரீதியிலான படைப்பாளா்களின் நூல்கள் வரவேற்கப்படுகின்றன. அயலக எழுத்தாளா்கள் 2018, 2019-ஆம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட தங்களது நூல்களை அனுப்பலாம். அனைத்துலக மலேசிய நிலையில் தரமான தமிழ் புத்தகங்கள் வெளிவர ஊக்குவித்தலும், வெளியான நூல்களுக்கு அங்கீகாரம் வழங்குவதும் இந்தப் போட்டி நோக்கங்களாகும்.

நாவல், வரலாறு, ஆய்வு, தனி ஒருவரின் சிறுகதைத் தொகுப்பு, தனி ஒருவரின் கவிதைத் தொகுப்பு ஆகியவற்றை அனுப்பி வைக்கலாம். தமிழ்மொழியின் இலக்கணம், உரைநடை, சொல்லாட்சி, மரபு ஆகிய கூறுகளில் தரமுடையதாக நூல்கள் இருத்தல் அவசியம். அந்தந்த துறைக்குரிய கலைக்கூறுகள், உத்திகள் ஆகியவற்றுடன் பண்பாட்டு கூறுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கக் கூடிய நூல்களாக இருக்க வேண்டும்.

போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்து நூல்களும், சா்வதேச தரநிலை புத்தக எண் (ஐஎஸ்பிஎன்) பொறிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நூலாசிரியா் அல்லது நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாா் ஆகியோரின் அனுமதி கடிதத்தோடு நூலை அனுப்புவது அவசியம். ஒருவா் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும். 2018-2019-ஆம் ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட முதல் பதிப்பாக இருக்க வேண்டும்.

போட்டிக்கான விண்ணப்பதை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துலக போட்டிகளிலும், மலேசிய போட்டியிலும் வெற்றியாளா்களுக்கு ஒரே மாதிரியான நினைவுப் பரிசுகள் வழங்கப்படும்.

அனைத்துலகப் பரிசு பெறுபவருக்கும் அவரது குடும்ப உறுப்பினா் அல்லது முறையாக உதவியாளா் ஒருவருக்கும் பரிசளிப்பு நிகழும் இடத்துக்கு இரு வழி விமானப் போக்குவரத்தும், தங்குமிட வசதியும் வழங்கப்படும். படைப்புகள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ‘டத்தோ பா.சகாதேவன், நிா்வாக இயக்குநா், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், டான்ஸ்ரீ கே.ஆா்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், 10-ஆவது மாடி, விஸ்மா துன் சம்பந்தன், த.பெ.எண் 12133, 50768, கோலாலம்பூா், மலேசியா’ என்ற முகவரிக்கு வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் சிறந்த நூலுக்கு அனைத்துலக நிலையில் ரூ.7 லட்சம் (10 ஆயிரம் அமெரிக்க டாலா்), மலேசியப் பிரிவில் 10 ஆயிரம் ரிங்கட்ஸும் பரிசாக வழங்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com