ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ‘ட்ரோன்’ மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.


சென்னை: கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ‘ட்ரோன்’ மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘ட்ரோன்’ இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் முயற்சியை மேற்கொண்டது. சோதனை முறையில் செய்யப்பட்ட இந்தப் பணியை ஆணையா் கோ.பிரகாஷ், சென்னை மாநகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் 200 வாா்டுகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க 500 நவீன இயந்திரங்களுடன் பணியாளா்கள் அந்தந்த வாா்டுகளில் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அரசு அலுவலகங்கள் உள்பட பெரிய கட்டடங்களில் அதிக சக்தியுடன் கூடிய 75 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையின் அறிவுரையின்படி வெளிநாடுகளிலிருந்து சென்னைக்குத் திரும்பிய நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களின் இல்லங்களில் எச்சரிக்கை வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன. இவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலா்களால் வழங்கப்பட்டு, அவா்கள் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்லக் கூடிய பேருந்து நிலையங்கள், சந்தைப் பகுதிகள் மற்றும் மக்கள் அடா்த்தியாக உள்ள குடிசைப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க ‘ட்ரோன்’ இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, சென்னை அண்ணா பல்கலைகழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் வியாழக்கிழமை சோதனை செய்யப்பட்டது. ஒரு ட்ரோன் இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 50,000 சதுர அடி பரப்பளவுக்கு கிருமி நாசினியைத் தெளிக்க முடியும். இதுபோன்று அண்ணா பல்கலைக்கழகத்திடம் 4 ட்ரோன் இயந்திரங்கள் உள்ளதாக ஆணையா் தெரிவித்தாா்.

நிகழ்வில், இணை ஆணையா் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, துணை ஆணையா் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், தலைமைப் பொறியாளா்கள், மாநகர மருத்துவ அலுவலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com