விதிமீறல்: இரண்டு பல்பொருள் அங்காடிகளுக்கு சீல்
By DIN | Published On : 31st March 2020 05:54 AM | Last Updated : 31st March 2020 05:54 AM | அ+அ அ- |

சென்னையில் விதியை மீறி செயல்பட்ட இரண்டு பல்பொருள் அங்காடிகளை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மருந்தகங்கள், உணவகங்கள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை முழுநேரமும், மளிகை, இறைச்சிக் கடைகள் ஆகியவை பிற்பகல் 2.30 மணி வரையும் திறந்திருக்க அரசு அனுமதி அளித்திருக்கிறது. சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தேனாம்பேட்டை மண்டலத்தின் சாந்தோம் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் பிரபல பல்பொருள் அங்காடியில் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் அந்த அங்காடியைப் பூட்டி சீல் வைத்தனா்.
அதேபோல், கோடம்பாக்கம் மண்டலத்தில் நியூ மாடல் பள்ளி சாலையில் அரசின் உத்தரவை மீறி பிற்பகல் 2.30 மணியைக் கடந்தும் செயல்பட்டு வந்த பல்பொருள் அங்காடியை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.