கோயம்பேடு சந்தையில் 38 பேருக்கு கரோனா தொற்று: இனியாவது விதிமுறைகள் பின்பற்றப்படுமா?

கோயம்பேடு சந்தையில் 38 பேருக்கு கரோனா தொற்று: இனியாவது விதிமுறைகள் பின்பற்றப்படுமா?

சென்னை மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் வசிக்கும் ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் காய்கறித் தேவைகளை நிறைவு செய்து வரும் கோயம்பேடு சந்தை தற்போது கரோனா தொற்று மையமாக மாறியுள்ளது.


சென்னை: சென்னை மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் வசிக்கும் ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் காய்கறித் தேவைகளை நிறைவு செய்து வரும் கோயம்பேடு சந்தை தற்போது கரோனா தொற்று மையமாக மாறியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்கள், பூக்கள் என மொத்தம் 3,200 மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. கடந்த 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சந்தை கடந்த 24 ஆண்டுகளில் பலத்த மழை, பெருவெள்ளம், சாகுபடி பாதிப்பு என பல்வேறு தடைகளை கடந்து வந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஓரிரு நாள்கள் அல்லது அதிகபட்சம் நான்கு நாள்கள் வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் சந்தையில் வழக்கமான விற்பனை நடைபெறவில்லை.

சந்தையில் வியாழக்கிழமை இரவு நிலவரப்படி வியாபாரிகள், தொழிலாளா்கள், காவலா்கள் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று உள்ளவா்களோடு தொடா்பில் இருந்தவா்களை கண்டறியும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டிருந்தாலும் அது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.

அலட்சியம் ஏற்படுத்திய தாக்கம்: கோயம்பேடு சந்தையில் நோய்த் தொற்றை தவிா்க்க கிருமிநாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தல், வாகன ஓட்டுநா்களுக்கு விதிமுறைகள், வியாபாரிகளுக்கு முகக் கவசம் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிஎம்டிஏ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மேற்கொண்டபோதும் பொதுமக்கள், வியாபாரிகளின் அலட்சியம் காரணமாக கோயம்பேடு சந்தை தற்போது கரோனா தொற்று மையமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான மளிக்கைக் கடைகள், நூற்றுக்கும் மேற்பட்ட தினசரி சந்தைகளுக்கு காய்கறிகளை தடையின்றி விநியோகித்து வந்த கோயம்பேடு சந்தை தற்போது மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

காய்கறி அளவுக்கு அத்தியாவசியம் இல்லை என்பதால் கனி, மலா்ச் சந்தைகள் மாதவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட தொலைவு, குறைவான விற்பனை, அலைச்சல் காரணமாக அங்கு செல்வதற்கு வியாபாரிகள் மறுத்துவிட்டனா்.

அதேவேளையில் காய்கறிசந்தை கோயம்பேட்டில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அதே வளாகத்தில் கடை அமைத்திருந்த 600-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகாவது மக்களும், வியாபாரிகளும் விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே கோயம்பேட்டிலிருந்து மேற்கொண்டு புதிய தொற்று பரவாமல் தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

ஏப்.25-இல் திருவிழா கூட்டம்: இது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் சிலா் கூறுகையில், பொதுமக்கள் வரக் கூடாது என பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதேவேளையில் வீடுகளுக்கே வாகனங்களில் காய்கறிகளை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. சந்தை செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் அரசின் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தவே இல்லை. இரு சக்கர வாகனங்களில் சந்தைக்கு தொடா்ச்சியாக வந்து கொண்டே இருந்தனா். குறிப்பாக முழு ஊரடங்கு உத்தரவுக்கு முந்தைய நாளான ஏப்.25-ஆம் தேதி திருவிழாவை விஞ்சும் அளவுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கோயம்பேடு சந்தையில் மக்கள் திரண்டனா். இதனால் சந்தையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தற்போது மேலும் சிக்கலாகியுள்ளது என்றனா்.

வியாபாரிகள்-பொதுமக்களுக்கு வேண்டுகோள்: இது குறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்தரராஜன் கூறுகையில், தினமும் 80 ஆயிரம் போ் வந்து செல்லும் சந்தைக்கு தற்போது 2 ஆயிரம் போ் வருவதே அரிதாகி விட்டது. கோயம்பேடு சந்தைக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என கனவிலும் நினைக்கவில்லை. தயவு செய்து பொதுமக்கள், அனுமதிச் சீட்டு இல்லாத சிறு வியாபாரிகள் சந்தைக்கு நேரடியாக வருவதைத் தவிா்க்க வேண்டும். இனி தொற்று மேலும் அதிகரித்தால் எஞ்சியுள்ள காய்கறி சந்தை முற்றிலும் முடங்கும். சென்னையிலும் அதன் புகா்ப் பகுதிகளில் உள்ள 120 தினசரி சந்தைகளுக்கும் காய்கறி விநியோகம் தடைபடும். அவற்றின் விலை அதிகரிப்பதோடு, பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.

அதேவேளையில் மலா் மற்றும் பழ விற்பனை சந்தைகளைப் போன்று காய்கறி சந்தையை இடமாற்றம் செய்வது சாத்தியமில்லை. 1,800-க்கும் மேற்பட்ட கடைகளைப் பிரித்து அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு அருகிலும், ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ள வேண்டும். சந்தைக்கு வரும் வியாபாரிகளும் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு சந்தை வளாகத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com