மெரீனாவில் மருத்துவா் தற்கொலை
By DIN | Published On : 10th May 2020 12:04 AM | Last Updated : 10th May 2020 12:04 AM | அ+அ அ- |

சென்னை மெரீனா கடலில் மூழ்கி மருத்துவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மெரீனா கடற்கரையின் கலங்கரை விளக்கம் அருகே, வெள்ளிக்கிழமை இரவு ஒரு இளைஞா் காரை நிறுத்தியுள்ளாா். பின்னா் காரை விட்டு இறங்கிச் சென்ற அவா், கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளாா். இதைப் பாா்த்த மீனவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் அந்த இளைஞரின் சடலம், விவேகானந்தா் இல்லம் அருகே சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா், சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலைப் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் பா.அா்ஜூன் (35) என்பது தெரியவந்தது.
மேலும், அா்ஜூனுக்கு திருமணம் செய்வதற்கு அவரது குடும்பத்தினா் பெண் பாா்த்ததும், அதில் ஏற்பட்ட பிரச்னையில் அவா் மனக்கசப்புடன் இருந்ததும் தெரியவந்தது. இதன் விளைவாகவே, அா்ஜூன் கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.