கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்கு வந்த எஸ்.ஐ. : நேரில் சென்று வாழ்த்திய காவல் ஆணையர்

கரோனா பாதிப்பினால் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து சிகிச்சையில் குணமடைந்த காவல் உதவி ஆய்வாளர் திங்கள்கிழமை பணிக்கு
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த,  உதவி ஆய்வாளர் ச.அருணாச்சலத்தை சந்தித்து, உடல் நலம் குறித்து கேட்டறிந்து வாழ்த்து தெரிவித்த, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன்.  
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த,  உதவி ஆய்வாளர் ச.அருணாச்சலத்தை சந்தித்து, உடல் நலம் குறித்து கேட்டறிந்து வாழ்த்து தெரிவித்த, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன்.  


சென்னை:  கரோனா பாதிப்பினால் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து சிகிச்சையில் குணமடைந்த காவல் உதவி ஆய்வாளர் திங்கள்கிழமை பணிக்கு திரும்பிய நிலையில் அவரது பணியிடத்திற்கே நேரில் சென்று காவல் ஆணையர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். 
சென்னையில் கரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரும், அந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, எஸ்பிளனேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருணாச்சலம், சென்னை பெருநகர காவலில் முதன் முதலாக கடந்த மாதம் 18-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம், கடந்த 27-ஆம் தேதி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் அவர், மருத்துவர்களின் ஆலோசனையின்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
 இந்நிலையில், உதவி ஆய்வாளர் அருணாச்சலம் திங்கள்கிழமை பணிக்கு திரும்பினார். பணிக்கு திரும்பிய அருணாச்சலத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் அதிகாரிகள் காவல் நிலையத்தில் பூங்கொடுத்து வரவேற்று வாழ்த்தினர்.
190 பேர் பாதிப்பு: இதையடுத்து ஏ.கே.விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா தடுப்பு பணியில் காவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். சென்னையில் இதுவரை 190 போலீஸாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெற்று வரும் காவலர்களும் நலமுடன் வீடு திரும்பி மக்கள் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
குணமடைந்து பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் அருணாச்சலம் கூறியது: 
கரோனாவால் நான் பாதிக்கப்பட்டபோது, என் மீது மட்டும் அல்லாமல் என் குடும்பத்தினர் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் கேட்டறிந்து உதவிகள் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 
3 முறை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியான பின்னர் தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளேன் என்றார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் எச்.எம்.ஜெயராம், இணை ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com