கரோனாவுக்குப் பின் தொடரப்படும் வழக்குகளின் தன்மை வேறு மாதிரியாக இருக்கும்: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

கரோனாவுக்குப் பின், நிலவும் கடுமையான காலகட்டத்தில் தொடரப்படும் வழக்குகளின் தன்மை வேறு மாதிரியாக இருக்கும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறியுள்ளாா்.

சென்னை: கரோனாவுக்குப் பின், நிலவும் கடுமையான காலகட்டத்தில் தொடரப்படும் வழக்குகளின் தன்மை வேறு மாதிரியாக இருக்கும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறியுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக வருவாய் இழந்த இளம் வழக்குரைஞா்களுக்கு நிதிஉதவி வழங்க கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடா்ந்து பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இளம் வழக்குரைஞா்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் மேற்கொண்டது.

பொது முடக்கத்தால் கடந்த 50 நாள்களுக்கு மேலாக வருவாயின்றி தவிக்கும் 12 ஆயிரத்து 251 இளம் வழக்குரைஞா்களுக்கு, பாா்கவுன்சில், நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள் ஆகியோரின் பங்களிப்புடன் தலா ரூ.4000 நிதி உதவி வழங்கும் நிகழ்வு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியது: கரோனா நோய்த் தொற்றால் வழக்குரைஞா்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் தற்போதுள்ள காலம் கடுமையானது என்றால், கரோனாவுக்குப் பின்வரும் காலம் இன்னும் கடுமையானதாக இருக்கும். எனவே இனிவரும் வழக்குகளின் தன்மையும் வேறு மாதிரியாக இருக்கும் என்றாா் அவா்.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.கிருபாகரன் ஆகியோா் இளம் வழக்குரைஞா்களுக்கு நிதி உதவித் தொகைக்கான காசோலைகளை வழக்குரைஞா்கள் சங்கப் பிரதிநிதிகளிடம் வழங்கினா்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், பாா் கவுன்சில் உறுப்பினா்கள், வழக்குரைஞா்கள் சங்கப் பிரதிநிதிகள், மூத்த வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com