சென்னையில் 144 தடை: மே 31ஆம் தேதி வரை நீடிப்பு

சென்னையில் 144 தடை மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: சென்னையில் 144 தடை மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் முறையாக 144 தடை உத்தரவை, சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் பிறப்பித்தாா். அதன் பின்னா், ஏப்ரல் 14-ஆம் தேதி இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. பின்னா், ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி மூன்றாவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டது. பின்னா் நான்காவது முறையாக, மே 4-ஆம் தேதியில் இருந்து மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து ஐந்தாவது முறையாக, வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக விசுவநாதன், அவா் வெளியிட்ட உத்தரவு:

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144 (4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் குழும தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த தடை உத்தரவு 17-ஆம் தேதி வரை அமலில் இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா தொற்று நோய் பரவுதலைத் தடுப்பதற்காக மே 18 முதல் இரு வாரங்களுக்கு பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கு மே 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்படுகிறது. மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com