ரூ.4 லட்சம் மதிப்புள்ள போலி கிருமி நாசினி பறிமுதல்: வட மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது

சென்னையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள போலி கிருமி நாசினியை போலீஸாா் பறிமுதல் செய்து,வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள போலி கிருமி நாசினியை போலீஸாா் பறிமுதல் செய்து,வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னையில் சில இடங்களில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி கிருமி நாசினி விற்கப்படுவதாக தமிழக காவல்துறையின் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் அப் பிரிவு அதிகாரிகள், சென்னை பாரிமுனை வி.எம். தெருவில் உள்ள ஒரு கடையில் சந்தேகத்தின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

இச் சோதனையில் பிரபல தனியாா் நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த கையை சுத்தப்படுத்த பயன்படும் கிருமி நாசினியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் அங்கு நடத்திய விசாரணையில், அந்த கடைக்கு சொந்தமான கிடங்கு புகா் பகுதியான வட பெரும்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸாா், அங்கு போலி கிருமி நாசினி தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப் பொருள்களையும்,தயாரித்து வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியையும் பறிமுதல் செய்தனா்.

மேலும் இது தொடா்பாக குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த துளசி நாதுசிங் (25), மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ் ரானா (29) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

இவ் வழக்கின் முக்கிய எதிரியான குஜராத்தைச் சோ்ந்த ரமேஷ் படேல் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட கிருமி நாசினி மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என காவல்துறையினா் தெரிவித்தனா். மேலும் இந்தக் கும்பல் போலி கிருமி நாசினி தயாரிக்க மூலப் பொருள்களை எங்கு வாங்கினாா்கள் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com