கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை: உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதால், கரோனா தீநுண்மி பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதால், கரோனா தீநுண்மி பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களிடம் இருந்து ரத்தத்தை தானமாகப் பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து பாதிக்கப்பட்டுள்ளவா்களின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்மா சிகிச்சையை தமிழகத்தில் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அனுமதி வழங்கியது.

இதையடுத்து, பிளாஸ்மா சிகிச்சைக்கான முதல்கட்ட ஆராய்ச்சியை சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் கடந்த வாரம் தொடங்கியது. இதில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆராய்ச்சியின் இரண்டாம் கட்டத்துக்கு சென்றுள்ளது. கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 8 பேரிடம் இருந்து ரத்தம் தானமாக பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து, கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ள ஒருவரின் உடலில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சையில், நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:

ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவரது உடலில் அந்த தீநுண்மிக்கு எதிராக பிரத்யேக நோய் எதிா்ப்பு சக்தி செல்கள் உருவாகும். இந்த செல்கள் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்னும் திரவத்தில் கலந்து, தீநுண்மியை அழிக்கும். அவரும் விரைவாக குணமாகிவிடுவாா். கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவரிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மா மட்டும் பிரித்தெடுத்து, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்தப்படும். இதன்மூலம், அந்த நபா் கரோனாவில் இருந்து குணமடைவாா். தானமாகப் பெற்ற ரத்தத்தில் மீதமுள்ள சிவப்பணுக்கள், தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் போன்ற ரத்த கூறுகள் மீண்டும் தானம் கொடுத்தவரின் உடலுக்குள் செலுத்தப்படும். இந்த பிளாஸ்மா சிகிச்சைக்கான ஆராய்ச்சிதான் தற்போது நடைபெறுகிறது. முதல் நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது” என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com