கரோனா பாதிப்பு: பணிக்கு திரும்பிய ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு காவல் ஆணையர் வாழ்த்து

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமி
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமிக்கு வாழ்த்து தெரிவித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமிக்கு வாழ்த்து தெரிவித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.


சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ்.ஸýக்கு  காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்த விவரம்: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரிடம் அந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் அண்ணாநகர் துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமி கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், கடந்த 7-ஆம் தேதி முதல் வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், கரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்ததினால், அவர் திங்கள்கிழமை பணிக்குத் திரும்பினார். அவரை வரவேற்கும் விதமாக, அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆணையர் எச்.எம்.ஜெயராம் தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த்சின்கா, இணை ஆணையர் பி.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், பணிக்குத் திரும்பிய முத்துசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல துணை ஆணையர்கள் பி.பகலவன், ஆர்.திருநாவுக்கரசு, எம்.சுதாகர், கே.ராஜேந்திரன், ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் முத்துசாமி அளித்த பேட்டி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் 3 நாள்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். பின்னர், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். யாரையும் பார்க்காமல் ஒரே அறையில் தனிமையில் இருந்தது சற்று மன அழுத்தமாக இருந்தது. அந்த நேரத்தில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அவ்வப்போது செல்லிடப்பேசியில் ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியது, பணியில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.

 கரோனாவை வீழ்த்த மருந்து, மாத்திரைகளை விட மனவலிமை முக்கியமானதாகும். அரசு கொடுக்கும் சத்து மாத்திரை, கபசுர குடிநீர், நில வேம்புக் குடிநீர் உள்ளிட்டவைகளும் மிகப்பெரிய அருமருந்து. இவற்றினால் கரோனாவில் இருந்து விரைவில் குணமடைந்துவிடலாம் என்றார் அவர்.

இதேபோல கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய காவலர்களையும் அதிகாரிகள் வாழ்த்தி வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com