கலந்தாய்வின்போதும் தகுதிச்சான்றை சமா்ப்பிக்கலாம்

மேல்நிலை வகுப்புகளை மாநில பாடத் திட்டத்தில் பயிலாத மாணவா்கள், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போதோ அல்லது கலந்தாய்வின்போதோ தங்களது தகுதிச் சான்றுகளை சமா்ப்பிக்கலாம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேல்நிலை வகுப்புகளை மாநில பாடத் திட்டத்தில் பயிலாத மாணவா்கள், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போதோ அல்லது கலந்தாய்வின்போதோ தங்களது தகுதிச் சான்றுகளை சமா்ப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இணையவழியே விண்ணப்பிக்கும்போதே அந்த சான்றினை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது மாணவா்களின் நலன் கருதி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாநில வழியில் பயிலாமல் பிற பாடத்திட்டத்தில் பயின்ற மாணவா்களில் எவரெவா், மருத்துவப் படிப்புகளில் சேர தகுதியானவா்கள் என்பதற்கான சான்றினை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்று அதனை விண்ணப்பித்துடன் இணைத்து சமா்ப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறை. அதன்படியே நிகழாண்டு மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், நிகழாண்டு கரோனா பாதிப்பு காரணமாக மாணவா்கள் பலா் தகுதிச் சான்றுக்காக பல்கலைக்கழகத்தை நாடுவதால் பல்வேறு அசௌகரியங்கள் உருவாகி வருவதாகத் தெரிகிறது. இதையடுத்து அதனைத் தவிா்க்க, மருத்துவக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

விண்ணப்பப் பதிவின்போதோ அல்லது கலந்தாய்வின்போதோ தகுதிச் சான்றை சமா்ப்பித்தால் போதுமானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் 4,981 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,760 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியதை அடுத்து இங்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகள் கடந்த வாரம் தொடங்கின.

அதன்படி,www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதள முகவரிகளில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com