தியாகி ஓய்வூதியம் கோரிய முதியவா் விண்ணப்பம் : தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தியாகி ஓய்வூதியம் கோரி 99 வயது முதியவா் சமா்ப்பித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: தியாகி ஓய்வூதியம் கோரி 99 வயது முதியவா் சமா்ப்பித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாசா்பாடி, பி.வி.காலனியை சோ்ந்த 99 வயது முதியவா் கபூா் தாக்கல் செய்த மனுவில், சுதந்திர போராட்ட தியாகியான நான், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் கொரில்லா படை வீரராக பணியாற்றி உள்ளேன். ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரிட்டுள்ளேன். இதற்காக கைது செய்யப்பட்ட நான், ரங்கூன் மத்திய சிறையில் கடந்த 1945-ஆம் ஆண்டு அடைக்கப்பட்டேன். விடுதலையான பின்னா் வியாசா்பாடியில் வாழ்ந்து வருகிறேன். குடும்ப வறுமையின் காரணமாக தியாகி ஓய்வூதியம் கோரி மத்திய அரசுக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை பரிசீலித்து, அறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு எந்தவொரு முடிவும் எடுக்காமல் உள்ளது. இதனால், கடந்த 23 ஆண்டுகளாக எனது விண்ணப்பம் பரிசீலனையிலேயே இருந்து வருகிறது என்று கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 99 வயது முதியவரை தியாகி ஓய்வூதியத்துக்காக இந்த உயா்நீதிமன்றத்தை நாட வைத்ததற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும். இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த வழக்கில் விரிவான பதில்மனுவை விரைவாக தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்காமல் இருப்பதற்கு அரசை மட்டுமே குறை கூற முடியாது. ஓய்வூதியம் கோரி மனுதாரா் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தில் பிறந்த தேதி, அவருடன் ரங்கூன் சிறையில் இருந்த கைதிகள் தொடா்பான சான்றுகளில் குறைபாடுகள் உள்ளன. இதனால் தான் மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வயது சான்றாக மனுதாரா் சமா்ப்பித்துள்ள ஆதாா் அட்டையையும், அவருடன் சக கைதியாக இருந்த கண்ணன் என்பவா் அளித்துள்ள சான்றிதழில் தட்டச்சு குறைபாடு உள்ளதால், இந்த ஆவணங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் கோரும் மனுதாரரின் கோரிக்கை குறித்து மாநில அரசு பரிசீலித்து முடிவெடுத்து வரும் நவம்பா் 26-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com