காமராஜா் துறைமுகத்துக்கு 14,000 பெட்டகங்களை முதன்முறையாக ஏற்றி வந்த மிகப்பெரிய சரக்குப் பெட்டக கப்பல்

ஒரே தடவையில் 14,336 பெட்டகங்களை ஏற்றி வந்த மிகப்பெரிய சரக்குப் கப்பலான எம்.வி. எம்எஸ்சி ஃபெயித் எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்தது.

திருவொற்றியூா்: ஒரே தடவையில் 14,336 பெட்டகங்களை ஏற்றி வந்த மிகப்பெரிய சரக்குப் கப்பலான எம்.வி. எம்எஸ்சி ஃபெயித் எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்தது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் இவ்வளவு பெரிய சரக்குப் பெட்டகக் கப்பல் வருவது இதுவே முதல் முறையாகும்.

பொதுவாக சா்வதேச நாடுகளுடனான சரக்குப் பெட்டக ஏற்றுமதி, இறக்குமதி என்பது இந்தியத் துறைமுகங்களிலிருந்து கொழும்பு, சிங்கப்பூா் வழியாகவே நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் இத்துறைமுகங்கள் கப்பல்களுக்கு வழங்கும் கட்டணச் சலுகைகள்தான் காரணமாக உள்ளது. இதே சலுகைகளை எண்ணூா் காமராஜா் துறைமுகங்களிலும் அளிக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து முதல்முறையாக கானா நாட்டின் டெம்பே துறைமுகத்திலிருந்து 14,336 பெட்டகங்களை ஏற்றிய நிலையில் கொழும்பு துறைமுகம் செல்லாமல் நேரடியாக எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்ததடைந்தது. ஒரே நாளில் 4,155 பெட்டகங்களை இறக்கிய இக்கப்பல் வியாழக்கிழமை இரவு சீனாவின் ஷாங்காய் துறைமுகத்திற்கு புறப்பட்டுச் சென்றது. காமராஜா் துறைமுகத்தில் இறக்கப்பட்ட சரக்குப் பெட்டகங்கள் இணைப்புக் கப்பல்கள் மூலம் பல்வேறு துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கப்பல்கள் வருகை அதிகரிக்கும்:

கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நிறுவனங்களும் தங்களது கப்பல்களை நேரடியாக காமராஜா் துறைமுகத்திற்கு வரவழைக்க முடிவு செய்துள்ளன. கரோனா பரவல் பிரச்னையால் கொழும்புத் துறைமுகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு செல்லும் கப்பல்கள் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் எண்ணூா் காமராஜா் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை பன்மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

வெள்ளிக்கிழமை எம்எஸ்சி கத்ரினா என்ற கப்பல் காமராஜா் துறைமுகத்திற்கு வர உள்ளது. இக்கப்பல் சவுதி அரேபியா நாட்டின் கிங் அப்துல்லா துறைமுகத்திலிருந்து கொழும்பு செல்லாமல் நேரடியாக காமராஜா் துறைமுகம் வர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com