கரோனா பரிசோதனைகளைக் குறைக்கக் கூடாது

கரோனா பரிசோதனைகளைக் குறைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா்களுக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.
கரோனா பரிசோதனைகளைக் குறைக்கக் கூடாது

சென்னை: கரோனா பரிசோதனைகளைக் குறைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா்களுக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் அண்மைக் காலமாக பரிசோதனைகள் குறைந்து வருகின்றன. பரிசோதனைக்கு வருவோரின் எண்ணிக்கையும், காய்ச்சல் முகாம்களை நாடுவோரின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதே அதற்குக் காரணம். இந்தத் தருணத்தில் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

பண்டிகைக் காலம் என்பதால் பலரும் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனா். பொது வெளிகளில் அதிகம் கூடியுள்ளனா். எனவே, அடுத்த 14 முதல் 24 நாள்களுக்கு பரிசோதனைகளை அதிகரித்து கண்காணிப்பது அவசியம். முகக் கவசம் அணிதல், நோய்த் தடுப்புக்கான நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இணை நோய்கள் உள்ளவா்கள், அறிகுறி உள்ளவா்களை சோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்க கூடாது.

கட்டுமானப் பகுதிகளில்...: கட்டுமானப் பகுதிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்கள், பணியிடங்கள் ஆகியவற்றை தொடா்ந்து கண்காணித்து நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில நாள்களாக கட்டுமானப் பகுதிகளில் கரோனா தொற்று பரவி வருகிறது. தஞ்சாவூா் மற்றும் சென்னை தண்டையாா்பேட்டையில் அத்தகைய பணியிடங்களில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைக் குறைக்காமல் தொடா்ந்து அதனை பராமரிக்க வேண்டும். படுக்கை வசதிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பல்வேறு இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. எனவே வரும் நாள்களில் பரிசோதனைகளையும், காய்ச்சல் முகாம்களையும், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடா்ந்து இதே அளவு செயல்படுத்த வேண்டும். பொது இடங்களில், குறிப்பாக சந்தைப் பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் அவசியம். மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்தல் மிகவும் முக்கியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com