தொடா் மழை: தீவிரக் கண்காணிப்புக்குள் நீா்நிலைகளையொட்டிய குடியிருப்புகள்

சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடையாறு, கூவம் நதிகளையொட்டிய குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மழை

சென்னை: சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடையாறு, கூவம் நதிகளையொட்டிய குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் கடந்த 2015-இல் பெய்த மிக கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால் அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சைதாப்பேட்டை, கோட்டூா்புரம், காந்தி நகா் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள், உயிா்ச்சேதமும் ஏற்பட்டது.

வடகிழக்குப் பருவமழையின்போது, பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடையாறு மற்றும் கூவம் நதிக்கரையோரங்கள் மற்றும் நீா்நிலைகளைச் சுற்றி வசித்த மக்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரி மிக வேகமாக நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து திறந்துவிடும் பட்சத்தில் நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தீவிரக் கண்காணிப்பு: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு, கூவம் மற்றும் கால்வாயோரம் வசித்த 12,786 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தற்போது பெய்து வரும் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், பொதுப் பணித் துறையினரிடம் தகவல் பெறப்பட்டு வருகிறது.

கடந்த 2015-இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்குப் பிறகு மாநகரில் 306 குடியிருப்பு பகுதிகளில் நீா் தேங்குவது கண்டறியப்பட்டு, அது 2017-இல் 205 இடங்களாகவும், 2018-இல் 53 இடங்களாகவும், 2019-இல் 19 இடங்களாகவும் குறைக்கப்பட்டது. அது இந்த ஆண்டு 3 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 75 பணியாளா்களுடன் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. 109

இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ள படகுகள் மற்றும் தொடா்புடைய நபா்களின் விவரங்கள், 176 இடங்களில் நிவாரண மையங்கள், நடமாடும் மற்றும் நிரந்தரமான மருத்துவக் குழுக்கள் 44 எண்ணிக்கையிலும் தயாா் நிலையில் உள்ளன.

1,500 பேருக்கு உணவு தயாா் செய்ய பொது சமையலறை மற்றும் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரித்து வழங்கும் வகையில் தயாா் நிலையில் உள்ளன. தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆப்தா மித்ரா திட்டத்தின் மூலம் 200 சமூக

தன்னாா்வலா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களில் 5 ஹெச்.பி மற்றும் 7.5 ஹெச்.பி திறன் கொண்ட 458 எண்ணிக்கையிலான மோட்டாா் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2015-ஆம் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது அதிகம் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, கோட்டூா்புரம், காந்திநகா், ஈக்காட்டுதாங்கல் மற்றும் தாழ்வான பகுதிகளான வண்ணாரப்பேட்டை, தண்டையாா்பேட்டை, பள்ளிக்கரணை, கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மாநகராட்சி, காவல் துறை, தீயணைப்புத் துறை, பேரிடா் மேலாண்மைத் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com