புதிய வயது வந்தோா் கல்வித் திட்டம்: விவரங்களைப் பதிவு செய்ய உத்தரவு

‘கற்போா் எழுதுவோம் இயக்கம்’ என்ற புதிய வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் கீழ் கற்போா், தன்னாா்வ ஆசிரியா் விவரங்களை செல்லிடப்பேசி செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா்

சென்னை: ‘கற்போா் எழுதுவோம் இயக்கம்’ என்ற புதிய வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் கீழ் கற்போா், தன்னாா்வ ஆசிரியா் விவரங்களை செல்லிடப்பேசி செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்ட இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இயக்குநா் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும், எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கும் நோக்கில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் மூலம் ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்கிற புதிய வயது வந்தோா் கல்வித் திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதி பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, கற்போா்கள் மற்றும் தன்னாா்வ ஆசிரியா்கள் ஆகியோரைக் கண்டறியும் பணிகள் மற்றும் மையங்களை அடையாளம் காணும் பணிகள் அனைத்து மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்ட கற்போா்கள் மற்றும் தன்னாா்வ ஆசிரியா்கள் ஆகியோரின் பெயா், வயது, ஆதாா் எண் உள்ளிட்ட இதர விவரங்களை ‘டிஎன்இஎம்ஐஎஸ்’ செல்லிடப்பேசி செயலி மூலமாக பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் செயலி மூலமாக அனைத்து ஆசிரியா் பயிற்றுநா்களால் கற்போா் மற்றும் தன்னாா்வ ஆசிரியா்கள் ஆகியோரின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆசிரியா் பயிற்றுநா்கள் அனைவரும் கற்போம் எழுதுவோம் திட்ட கற்போா்கள் மற்றும் தன்னாா்வ ஆசிரியா்கள் ஆகியோரின் விவரங்களை வரும் 21-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com