யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவா் என்றும் விரைவில் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் 9 தனியாா் கல்லூரிகள் உள்ளன. அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்பு 2020 - 21-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கியது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் சமா்ப்பித்தனா். மொத்தம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தகுதியான 2,002 பேருக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

தரவரிசைப் பட்டியலில் ஷாஃபிக்கா ரிஸ்வானா முதலிடத்தையும், பி.ஏ.கீா்த்தி ஸ்ரீ இரண்டாவது இடத்தையும், டி.சாருலதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். தரவரிசைப் பட்டியலில் முதல் 9 இடங்களை மாணவிகளும், 10-வது இடத்தை ஒரு மாணவரும் பெற்றுள்ளனா். தரவரிசைப் பட்டியல் சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அந்த இணையதள முகவரியை மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதுதொடா்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்த படிப்புக்கு நிகழாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். அவா்களில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.

அரசுக் கல்லூரி இடங்கள், தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான 65 சதவீத இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான 35 சதவீத இடங்களை தனியாா் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com