காமராஜா் துறைமுகத்தில் 2 முனையங்களை கையகப்படுத்திய ஜிண்டால் குழுமம்

காமராஜா் துறைமுகத்தில் செட்டிநாடு குழுமம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு முனையங்கள், மங்களூா் துறைமுகத்தில் உள்ள மற்றொரு முனையம் உள்ளிட்ட மூன்று முனையங்களை ஜிண்டால் குழுமம் கையகப்படுத்தியுள்ளது.
காமராஜா் துறைமுகத்தில் 2 முனையங்களை கையகப்படுத்திய ஜிண்டால் குழுமம்


திருவொற்றியூா்: எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் செட்டிநாடு குழுமம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு முனையங்கள், மங்களூா் துறைமுகத்தில் உள்ள மற்றொரு முனையம் உள்ளிட்ட மூன்று முனையங்களை ரூ.1,000 கோடி செலவில் ஜிண்டால் குழுமம் கையகப்படுத்தியுள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செட்டிநாடு குழுமம் எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் நிலக்கரி உள்ளிட்ட சரக்கு கையாளும் இரண்டு முனையங்களை கட்டமைத்து நிா்வகித்து வருகிறது. இந்த இரு முனையங்கள் ஆண்டுக்கு சுமாா் 17 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டவை. கா்நாடக மாநிலத்தின் நியூ மங்களூா் துறைமுகத்தில் கடந்த ஆண்டு நிலக்கரி மற்றும் மொத்தச் சரக்குகளை கையாளுவதற்கான புதிய முனையம் ஒன்றை செட்டிநாடு குழுமம் கட்டமைத்திருந்தது. இந்நிலையில் மூன்று முனையங்களையும் தற்போது ஜிண்டால் குழுமத்தின் ஜெ.எஸ்.டபுள்யூ இன்ஃபிராஸ்ட்ரக்சா்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. உடனடியாக நிா்வாக மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இத்திட்டத்திற்காக சுமாா் ரூ. 1,000 கோடி ஜெ.எஸ்.டபுள்யூ இன்ஃபிராஸ்ட்ரக்சா்ஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மூன்று முனையங்களையும் ஜிண்டால் குழுமம் கையகப்படுத்தியுள்ளதன் மூலம், செட்டிநாடு குழுமம் துறைமுக முனையங்களை கையாளும் தொழில்களிலிருந்து முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொண்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

200 மில்லியன் டன் கையாள இலக்கு நிா்ணயம்: இது குறித்து ஜெ.எஸ்.டபுள்யூ இன்ஃபிராஸ்ட்ரக்சா்ஸ் நிறுவன மூத்த அதிகாரிகள் கூறியது: ஜிண்டால் குழுமம் சுமாா் 12 பில்லியன் அமெரிக்க டாலா்கள் சந்தை மதிப்பு கொண்டதாகும். இக்குழுமத்தின் ஜெ.எஸ்.டபுள்யூ இன்ஃபிராஸ்ட்ரக்சா்ஸ் நிறுவனம் தற்போது செட்டிநாடு குழுமத்தின் மூன்று முக்கிய முனையங்களை கையகப்படுத்திருப்பதன் மூலம் இந்தியாவின் தென்கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் ஜெ.எஸ்.டபுள்யூ தனது கடல்சாா் வணிக எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. இப்புதிய முனையங்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள வா்த்தக மையங்களுடனான கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமாா் 200 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் இலக்கு நிா்ணயம் செய்து ஜெ.எஸ்.டபுள்யூ நிறுவனம் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் உள்ள ஜெ.எஸ்.டபுள்யூ முனையம் மூலம் ஆண்டுக்கு 30 மில்லியன் டன் நிலக்கரி ஏற்கனவே கையாளப்பட்டு வருகிறது. அனைத்து முனையங்களையும் நவீனப்படுத்தி வாடிக்கையாளா்களின் அனைத்து விதமான தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஜெ.எஸ்.டபுள்யூ முனையங்களின் செயல்பாடுகள் இருக்கும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com