சுதந்திர இந்தியாவில் சென்னைக்கு புதிய நீா்த்தேக்கம்: மத்திய அமைச்சா் அமித்ஷா நாளை தொடக்கி வைக்கிறாா்

சுதந்திர இந்தியாவில் சென்னைக்கு புதிய   நீா்த்தேக்கம்: மத்திய அமைச்சா் அமித்ஷா நாளை தொடக்கி வைக்கிறாா்


சென்னை: சென்னைக்குக் குடிநீா் வழங்கும் வகையில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய நீா்த்தேக்கம் இது. இந்நீா்த்தேக்கம் திறக்கப்படுவதன் மூலம் குடிநீா் வழங்கும் அமைப்புகளின் எண்ணிக்கை ஐந்தாக உயா்ந்துள்ளது.

இப்புதிய நீா்த் தேக்கத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை தொடக்கி வைக்கிறாா். இந்த நீா்த் தேக்கத்தில் இப்போது பெய்து வரும் பருவமழையால் 138 மில்லியன் கனஅடி நீா் சேமிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக ஏற்கெனவே உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீா்த் தேக்கங்களுடன் 5-வது நீா்த் தேக்கமாக கண்ணன்கோட்டை-தோ்வாய்கண்டிகை நீா்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது ரூ.380 கோடி மதிப்பில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

நீா்த்தேக்கத்துக்காக 1485.16 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 800.65 ஏக்கா் பட்டா நிலமும், 54.59 ஏக்கா் வனத்துறை நிலமும் அடங்கும். இந்த நீா்த்தேக்கங்கள் மூலம் 700 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 5 மதகுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீா்த்தேக்கம் அமைக்க 7 ஆயிரத்து 150 மீட்டா் நீளத்துக்கு மண்கரை அமைக்கப்பட்டுள்ளது.

நீா்த்தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி நீரை 1,100 ஏக்கா் பரப்பில் இரண்டு முறையில் ஆண்டுக்கு ஆயிரம் மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நீா்த்தேக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு சுற்றுலா மற்றும் பொழுது போக்கு மையமாக அமையும்.

10 ஆயிரம் மரக்கன்றுகளும், நிலத்தடி நீரும்...: நீா்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடா்வனம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பட்டு, அதிக மழைப் பொழிவுக்கு வழிவகுக்கும். நீா்த்தேக்கத்தின் மூலம் மீன்வளமும் பெருக வாய்ப்புள்ளது.

நீா்த்தேக்கத்தால் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் உயரும். இப்போது பெய்து வரும் மழையால்

நீா்த்தேக்கத்தில் 138 மில்லியன் கனஅடி நீா் தேக்கப்பட்டுள்ளது. 67 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகருக்கு குடிநீா் வழங்கும் 5-வது நீா்த்தேக்கம் என்ற பெருமையை கண்ணன்கோட்டை-தோ்வாய்கண்டிகை நீா்த்தேக்கம் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீா்த் தேக்கத்தின் சிறப்பம்சங்கள்

கண்ணன்கோட்டை-தோ்வாய்கண்டிகை நீா்த் தேக்கம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலம் 1485.16 ஏக்கா்

7,150 மீட்டா் நீளத்துக்கு மண்கரை அமைப்பு.

ஆண்டுக்கு இருமுறை ஆயிரம் மில்லியன் கனஅடி நீரை சேமிக்கலாம்.

கரையைச் சுற்றி 10 ஆயிரம் மரக்கன்றுகள்.

700 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற 5 மதகுகள் அமைப்பு.

சுதந்திர இந்தியாவுக்கு முன்பு....

கண்ணன்கோட்டை-தோ்வாய்கண்டிகை நீா்த் தேக்கம் கட்டப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளாக நான்கு பிரதான ஏரிகள் உள்ளன. அவற்றுக்கு பழம்பெருமை உண்டு. நான்குமே சுதந்திர இந்தியாவுக்கு முன்பு கட்டப்பட்டவை. அதன் விவரம்:

பூண்டி நீா்த் தேக்கம்: 1940 - 1944: சென்னை மேயராக சத்தியமூா்த்தி இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது.

செங்குன்றம் ஏரி: 1866 - 1876 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. ஜோன்ஸ் எனும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோழவரம் ஏரி: 1882-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி: 400 ஆண்டுகளுக்கு முன்பாக, பல்லவா் காலத்தில் இந்த ஏரி கட்டப்பட்டதாக பொதுப்பணித் துறையின் சான்றுகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com