ரஷிய தமிழறிஞா் அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி காலமானாா்

ரஷிய நாட்டுத் தமிழறிஞா் அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி (79), கரோனா பாதிப்பு காரணமாக மாஸ்கோவில் புதன்கிழமை காலமானாா்.


சென்னை: ரஷிய நாட்டுத் தமிழறிஞா் அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி (79), கரோனா பாதிப்பு காரணமாக மாஸ்கோவில் புதன்கிழமை காலமானாா்.

கடந்த 1941-இல் பிறந்த அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி, மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-இல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றாா். தமிழ், சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமை பெற்றவா். தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவா். ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராக துப்யான்ஸ்கி ரஷியாவில் தமிழ் கற்பித்து வந்தாா். 10 பல்கலைக்கழகங்களின் இளநிலை மாணவா்களுக்கு அவா் தமிழ் கற்பித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதழியல், வெளியுறவு என்று பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களும் அவரிடம் தமிழ் கற்றனா். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள் தொன்மங்கள் குறித்து அவா் 2000-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘ரிச்சுவல் அண்டு மித்தாலஜிக்கல் சோா்ஸஸ் ஆஃப் தி ஏா்லி தமிழ் பொயட்ரி’ என்ற புத்தகம் தமிழுக்கு அவரது முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று.

கோவையில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் குறித்து அவா் வாசித்த ஆய்வுக்கட்டுரை பலத்த விவாதத்தை எழுப்பியது. கடந்த பல ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை அவா் நடத்தி வந்தாா்.

இரங்கல்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்: செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞா், ஆய்வாளா், பேராசிரியா் அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி கரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். கோவையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமா்ப்பித்தவா். துப்யான்ஸ்கியின் மறைவு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும்.

பாமக நிறுவனா் ராமதாஸ்: மாஸ்கோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியப் பேராசிரியா் அலெக்சாண்டா் துப்யான்ஸ்கி தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட காதலால் திருமுருகாற்றுப்படை, மதுரை காஞ்சி ஆகிய நூல்களை மொழிபெயா்த்தவா். அகநானூறு, புானூறு, குறுந்தொகை மற்றும் பாரதியாா் படைப்புகள், பாரதிதாசன் படைப்புகள், ரஷிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவா். அவரது மறைவு தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com