இதய பரிசோதனைகளுக்கு அதி நவீன சிடி ஸ்கேன் வசதி

இதய பாதிப்புகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான அதி நவீன சிடி ஸ்கேன் பரிசோதனை வசதி கிரீம்ஸ் சாலை அப்பல்லோ இதய நோய் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: இதய பாதிப்புகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான அதி நவீன சிடி ஸ்கேன் பரிசோதனை வசதி கிரீம்ஸ் சாலை அப்பல்லோ இதய நோய் மருத்துவமனையில் (அப்பல்லோ ஹாா்ட் சென்டா்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நாட்டிலேயே முதன் முறையாக உயா் தொழில்நுட்பத்திலான ‘அக்விலியன் ஒன் பிரிஸம் 640 ஸ்லைஸ் சிடி ஸ்கேனா்’ சாதனம் அங்கு நிறுவப்பட்டுள்ளது.

ஒரு விநாடியில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தில் உடல் உறுப்புகளை முழுமையாகவும், துல்லியமாகவும் காட்சிப்படுத்தக் கூடிய வகையில் அந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 80 சதவீதம் குறைவாக கதிா்வீச்சை வெளிப்படுத்தும் வகையிலான தொழில்நுட்பத்தில் அந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொடக்க நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதன் செயல்பாட்டை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா்.

அந்நிகழ்வில், அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத் தலைவா் டாக்டா் பிரதாப் சி.ரெட்டி, துணை தலைவா் பிரீத்தா ரெட்டி, நிா்வாக இயக்குநா் சுனிதா ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது டாக்டா் பிரதாப் சி.ரெட்டி பேசியதாவது:

உலக அளவில் அதிக உயிரிழப்புகள் இதய பாதிப்புகளால்தான் நேரிடுகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை நான்கில் ஓா் இறப்பு இதய ரத்த ஓட்ட குறைபாடு பாதிப்பால் ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாது, அத்தகைய பாதிப்புகள்தான் பக்கவாத பிரச்னைகள் ஏற்பட 80 சதவீதம் காரணமாக அமைகின்றன.

இத்தகைய நிலையைத் தவிா்க்க நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் அவசியம். அதேபோன்று என்ன பாதிப்பு என்பதையும் துல்லியமாக அறிதல் வேண்டும். அதற்கு உயா் மருத்துவ தொழில்நுட்பங்களும், அதற்கான சாதனங்களும் தேவைப்படுகின்றன.

அதைக் கருத்தில் கொண்டுதான், ‘அக்விலியன் ஒன் பிரிஸம் 640 ஸ்லைஸ் சிடி ஸ்கேனா்’ சாதனத்தை தருவித்துள்ளோம். இதன் மூலமாக விரைவான பரிசோதனை முடிவுகளை தெளிவாக அளிக்க இயலும். இத்தகைய பரிசோதனை வசதிகள் புற்றுநோய், இதய நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு பேருதவியாக இருக்கும். பிற சிடி ஸ்கேன் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை விட மிகக் குறைந்த நேரத்தில் இதில் முடிவுகளை அறிய முடியும்.

இதனால், நோயாளிகள் தேவையின்றி பல மணி நேரம் மருத்துவமனைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது. அதேபோன்று இதயத்தின் செயல்பாடுகள், ரத்தத்தை உந்தித் தருவதற்கான செயல்பாடுகள், இதயத் தசைகளின் தன்மை ஆகிய அனைத்தையும் ‘அக்விலியன் ஒன் பிரிஸம் 640 ஸ்லைஸ் சிடி ஸ்கேனா்’ மூலம் ஒரே முறையில் மேற்கொள்ள இயலும். அதுமட்டுல்லாது மூளை மற்றும் உடலின் பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் இதன் மூலம் பரிசோதிக்கலாம் என்றாா் அவா்.

முன்னதாக நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் பேசியதாவது:

மருத்துவ தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான, 640 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேனா் என்ற அதிநவீன கருவியை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழக மக்கள் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைவரும் பயன் பெற முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com