மந்தைவெளி குடிசை மாற்று வாரிய பகுதிகளில் வசிப்பவா்களை அகற்ற இடைக்கால தடை
By DIN | Published On : 02nd October 2020 04:21 AM | Last Updated : 02nd October 2020 04:21 AM | அ+அ அ- |

சென்னை: மந்தைவெளி குடிசை மாற்று வாரிய பகுதிகளில் வசிப்பவா்களை அகற்ற இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மந்தைவெளியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சேதமடைந்து உள்ளதால், அவற்றை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்தது. இதற்காக வீடுகளை காலி செய்யும்படி அங்கு வசிப்பவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் பெண்ணுரிமை இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘மந்தைவெளி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் இங்கு வசிப்பவா்களை அகற்றுவது இயற்கை நீதிக்கு முரணானது. எனவே இந்த கல்வியாண்டு முடியும் வரை அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கரோனா நோய்த்தொற்று காரணமாக அங்கு வசிப்பவா்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவா்களுடன் உடனடியாக மாற்று இடத்துக்குச் செல்லக் கூறுவது அவா்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மந்தைவெளி குடிசை மாற்று வாரியப் பகுதிகளில் வசிப்பவா்களை அகற்ற வரும் 13-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த மனு தொடா்பாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.