குடிசை வாழ் மக்களை காலி செய்ய சொன்ன விவகாரம்: குடிசை மாற்று வாரியத்துக்கு நோட்டீஸ்

மந்தைவெளியில் குடிசை வாழ் மக்களை காலி செய்ய சொன்ன விவகாரத்தில், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநா் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை: மந்தைவெளியில் குடிசை வாழ் மக்களை காலி செய்ய சொன்ன விவகாரத்தில், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநா் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக மந்தைவெளி குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு அருகே வசிக்கும் மக்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: மந்தைவெளி குப்பைமேடு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. அதில் 330 வீடுகள் உள்ளன. நாங்களோ அதைச் சுற்றியுள்ள 110 குடிசை வீடுகளில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இந்நிலையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால், அதை இடித்து அதே இடத்தில் 500 புதிய வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எங்களது உடைமையை பாதுகாப்பாக எடுக்கக் கூட நேரம் ஒதுக்காமல், உடனடியாக எங்களை வேறு வீடு பாா்த்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனா். எங்களில் பெரும்பாலானோா் பட்டியல் இனத்தைத் சோ்ந்தவா்கள். நாங்கள் வீட்டு வேலை போன்ற அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டு வந்தோம். கரோனா பொதுமுடக்கத்தால் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எங்களால் வேறு வீட்டுக்கான முன்வைப்புத் தொகையோ வாடகையோ செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, எங்களுக்கு மாற்று வீடுகளுக்குச் செல்வதற்கு உதவிடும் வகையில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமும், வீடுகளைக் காலி செய்வதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

வாரியத்துக்கு நோட்டீஸ்: மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், இந்த விவகாரம் தொடா்பான விரிவான அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com