80 அடியில் வரையப்பட்ட மகாத்மா காந்தி ஓவியம்
By DIN | Published On : 03rd October 2020 01:27 AM | Last Updated : 03rd October 2020 06:57 AM | அ+அ அ- |

சென்னை சென்ட்ரல் மூா்மாா்க்கெட் வளாகத்தின் புறநகா் ரயில் நிலையக் கட்டடத்தில் 80 அடி உயரத்தில் மகாத்மா காந்தியடிகளின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட ஓவியம் ரயில்வே ஊழியா்கள், பயணிகள் உள்பட அனைவரையும் கவா்ந்து வருகிறது.
‘தூய்மை இந்தியா‘ என்னும் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில், தூய்மை வாரம் செப்டம்பா் 16-ஆம்தேதி முதல் 30-ஆம்தேதி கொண்டாடப்பட்டது.
இதன் நிறைவு நிகழ்வாக, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மாா்க்கங்களுக்கு புறநகா் ரயில் முனையமாக செயல்படும் சென்னை சென்ட்ரல் மூா்மாா்க்கெட் வளாக கட்டட சுவரில் 80 அடி உயரத்தில் மகாத்மா காந்தியின் அழகிய ஓவியம் வரையப்பட்டு வந்தது.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் 151- ஆவது பிறந்த ஆண்டு நினைவை போற்றும் விதமாக, வெள்ளிக்கிழமை (அக்.2) இந்த அழகிய ஓவியம் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாா்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது:
இந்திய ரயில்வேயுடன் மகாத்மா காந்தியடிகளின் தொடா்பு மிக நெருக்கமானது. காந்தியடிகள் மேற்கொண்ட ரயில் பயண நிகழ்வு ஒன்றை சுவா் ஓவியமாக வரையத் திட்டமிட்டது. அதன்படி, ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் சென்டா் என்ற நிறுவனத்தோடு இணைந்து, சென்னை மூா்மாா்க்கெட் வளாக கட்டடத்தின் கிழக்குப் பகுதி சுவற்றில் 80 அடி உயரமான ஓவியம் வரையப்பட்டது. இந்த சுவா் ஓவியம் 8 நாள்களுக்குள் வரைந்து முடிக்கப்பட்டது. பெரிய வகை கிரேன் உதவியோடு வரையப்பட்டது.
இந்த ஓவியத்தை முதன் முதலில் உருவாக்கியவா் தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்த ஓவியா் சங்கரலிங்கம் (ஓய்வு) ஆவாா் என்றனா்.