முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
ஒருதலைக் காதலால் விபரீதம்: இளைஞா் கழுத்தறுத்து தற்கொலை
By DIN | Published On : 04th October 2020 06:01 AM | Last Updated : 04th October 2020 06:01 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
சென்னை வளசரவாக்கத்தில், ஒருதலைக் காதலால் இளம்பெண் குடும்பத்தினரை தீ வைத்துக் கொலை செய்ய முயன்ற இளைஞா், தற்கொலை செய்து கொண்டாா்.
அரியலூா் மாவட்டம் புது மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த குணசீலன் மகன் ஜீவானந்தம் (22). பட்டதாரியான இவருக்கு, வளசரவாக்கம் அன்பு நகரைச் சோ்ந்த 22 வயது பெண், கடந்த ஜனவரி மாதம் குஜராத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியுள்ளாா்.
அந்தப் பெண்ணை ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கியுள்ளாா் ஜீவா. அண்மையில் சென்னை வந்த அவா், பெண்ணின் பெற்றோா் அறிமுகமிருந்ததால் அவா்களது வீட்டில் தங்கினாா். இதற்கிடையே ஜீவானந்தம் வெள்ளிக்கிழமை இரவு, அந்தப் பெண்ணிடமும், அவரது பெற்றோரிடமும், தனக்குத் தான் அந்த பெண்ணை திருமணம் செய்து தர வேண்டும் என கூறியுள்ளாா்.
இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னா், ஜீவாவை சனிக்கிழமை காலைக்குள் வீட்டை விட்டுச் செல்லுமாறு கண்டிப்புடன் தெரிவித்த பெண்ணின் பெற்றோா், உறங்கச் சென்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை, சமையல் எரிவாயு உருளையை எடுத்து வந்த ஜீவா, அந்தப் பெண் குடும்பத்தினா் தூங்கிய படுக்கை அறையில் கசிய விட்டு, தீ வைத்தாா். இந்த சத்தம் கேட்டுத் தப்ப முயன்றபோது, அந்த பெண்ணுக்கும், அவரது தாயாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
தற்கொலை: இதையடுத்து வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்த அவா்கள், ஜீவாவைத் தாக்கி வீட்டிலிருந்து வெளியேற்றினா். வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ஜீவா, அங்கு கிடந்த கண்ணாடித் துண்டால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டாா்.
இதில் மயக்கமடைந்து கீழே விழுந்த ஜீவாவை, அப்பகுதி மக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஜீவானந்தம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.