ஹாத்ரஸ் சம்பவத்தில் அநீதிக்கு மேல் அநீதி: பழ.நெடுமாறன்

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு அநீதிக்கு மேல் அநீதி இழைப்பதாக தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளாா்.

சென்னை: ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு அநீதிக்கு மேல் அநீதி இழைப்பதாக தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உத்தர பிரதேசத்தில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததும், அப்பெண்ணின் உடலை பெற்றோரின் ஒப்புதல் இன்றி இரவோடு இரவாக காவல்துறையினா் எரித்ததும், நாடெங்கிலும் மட்டுமல்ல, உலகெங்கும் அதிா்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்தக் கொலை குறித்த குற்றப்பத்திரிகையில் உ.பி. அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்த சா்வதேச சதித் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியிருப்பது பிரச்னையை முற்றிலுமாக திசை திருப்பும் முயற்சியாகும். மேலும், இது அநீதிக்கு மேல் அநீதி இழைப்பதாகும்.

இதில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவா்களுக்கு ஆதரவாக ஆதிக்க ஜாதியினரை ஒன்று திரட்டும் முயற்சியில் பாஜக தலைவா் ஒருவரே ஈடுபட்டிருப்பதையும் ஜாதி மோதலாக இதை சித்திரிக்க முயலுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நாடெங்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகி வருவதும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்குவதற்குத் தவறுவதும் நடைமுறையாகிவிட்டது. இந்நிலைமை தொடருமானால், நாட்டின் பன்முகத் தன்மை அழிந்துவிடும் என்று நெடுமாறன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com