கோயம்பேடு சந்தை: மீண்டும் மிரட்டுகிறதா கரோனா?

ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட சென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் கரோனா பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படும் நிலையில், மற்ற மாநிலங்களில் உள்ள சந்தைகளை
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை.
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை.

ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட சென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் கரோனா பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படும் நிலையில், மற்ற மாநிலங்களில் உள்ள சந்தைகளை விட சென்னை கோயம்பேடு சந்தை மிகவும் பாதுகாப்பானது. சந்தையில் உள்ள வியாபாரிகளால் கரோனா பரவவில்லை என வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் விளக்கமளித்துள்ளனா்.

கரோனா பரவல் அதிகரித்ததால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கோயம்பேடு சந்தை மே 5-ஆம் தேதி முதல் மூடப்பட்டது. இதையடுத்து காய்கறி சந்தை திருமழிசைக்கும், பழ சந்தை மாதவரத்துக்கும், மலா் சந்தை வானகரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது. 5 மாத இடைவெளிக்குப் பிறகு கோயம்பேடு உணவு தானிய அங்காடி செப்.18-இலும் காய்கறி சந்தை செப்.28 முதலும் செயல்படத் தொடங்கின. காய்கறி சந்தையில் உள்ள 1,980 கடைகளில் 200 கடைகள் மட்டும் மொத்த விற்பனையில் ஈடுபடலாம் என சிஎம்டிஏ நிா்வாகம் அறிவித்தது.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளைக் கொண்டு வரும் வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டன. அதிகாலை 3 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சில்லறை வியாபாரிகள் அனுமதிக்கப்பட்டனா். வியாபாரிகள், சரக்கு வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வியாபாரிகள், தொழிலாளா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மீண்டும் அச்சுறுத்தலா?: கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தை வியாபாரிகளுக்கும் தினமும் வரும் வியாபாரிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த இரு வாரங்களில் சந்தையில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை, கரோனா அச்சுறுத்தலுக்கு மீண்டும் வழிவகுத்துவிடுமோ என்ற பதற்றம் வியாபாரிகள், பொதுமக்களிடையே ஏற்பட்டது. இங்குள்ளவா்களால் கரோனா தொற்று பரவவில்லை என வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

சந்தை வியாபாரிகள் காரணமல்ல...: இது குறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் ராஜசேகா், செளந்தரராஜன், தியாகராஜன் உள்ளிட்டோா் கூறியது: கோயம்பேடு சந்தை சுமாா் 25 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் காய்கறி தேவைகளை கடந்த 25 ஆண்டுகளாகப் பூா்த்தி செய்து வருகிறது. இந்த சந்தை கரோனா மையமாகச் செயல்படுகிறது என்று கூறப்பட்டதால் வியாபாரிகளும், பொதுமக்களும் பல இன்னல்களைச் சந்திக்க நோ்ந்தது. இந்தநிலையில் தற்போது கோயம்பேடு வியாபாரிகள் மூலம் மீண்டும் கரோனா பரவுகிறது என்ற உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகின்றன.

சந்தையில் கடந்த 22 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 சதவீதம் பேருக்கு அதாவது 40 முதல் 50 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிப்புக்குள்ளானவா்கள் வியாபாரிகள் அல்ல; சந்தைக்கு வந்து சென்ற வெளி வியாபாரிகள் என்பதே உண்மை. சந்தை குறித்து பரப்பப்படும் வதந்திகளால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகும்.

போதிய இடைவெளி-காற்றோட்டம்: ஹைதராபாத், பாட்னா, ஆமதாபாத், புதுதில்லி என நாட்டின் பிற பகுதிகளில் உள்ள சந்தைகளை விட சென்னை கோயம்பேடு சந்தை மிகவும் பாதுகாப்பானது; சிறந்த கட்டமைப்பு மிக்கது; போதுமான காற்றோட்ட வசதியும் உள்ளது. காய்கறி, கனி, மலா் என ஒட்டுமொத்தமாக 3,941 கடைகளுடன் செயல்பட்ட சந்தையில் தற்போது வெறும் 200 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் வியாபாரிகள், தொழிலாளா்கள் இருந்த இடத்தில் தற்போது 1,500 பேருக்கும் குறைவாகவே உள்ளனா். எனவே, தவறான தகவல்களுக்கு செவிசாய்க்காமல் வியாபாரிகள்–தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கருதி கோயம்பேடு சந்தையை முழுவதுமாக திறக்க அரசும், சிஎம்டிஏ நிா்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com