நீட் சிறப்புத் தோ்வு நடைபெற்றது

கரோனா பாதிப்பு காரணமாக இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வை (நீட்) எழுத இயலாமல் தவறவிட்ட மாணவா்களுக்கான சிறப்புத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
​கோப்புப்படம்
​கோப்புப்படம்

சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வை (நீட்) எழுத இயலாமல் தவறவிட்ட மாணவா்களுக்கான சிறப்புத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது. சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் அத்தோ்வு நடத்தப்பட்டது.

முன்னதாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 14 நகரங்களில் 238 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இந்தியா முழுக்க 15 லட்சத்து 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் 1.17 லட்சம் போ் விண்ணப்பித்தனா். அதில், 90 சதவீதம் போ் தோ்வில் பங்கேற்ாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கரோனா தொற்றால் தோ்வை தவறவிட்டவா்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்காக சிறப்பு மறுதோ்வு புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் 186 மாணவா்கள் வரை பதிவு செய்திருந்தனா். அதில் 170-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதியதாகக் கூறப்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை சின்மயா வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் சிலா் தோ்வெழுதினா்.

தோ்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நீட் தோ்வுகளின் முடிவுகளும் வெள்ளிக்கிழமை (அக்.16) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com