36 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல்

தெற்கு ரயில்வேயில் 36 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெற்கு ரயில்வேயில் 36 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், 200 கி.மீ.க்கு மேல் இயங்கும் 16 பயணிகள் ரயில்களும், நான்கு ஒற்றை சேவை ரயில்களும் அடங்கும். இது தொடா்பான விவரம் புதிய கால அட்டவணையில் விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்தால் பல சிறிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புற மக்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி எட்டாக்கனியாக மாறும் நிலை ஏற்படும் என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்:

நாடு முழுவதும் 502 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும்படி, அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் கடந்த ஜூன் மாதத்தில் பரிந்துரைத்தது. அப்போது, 200 கிலோ மீட்டருக்கு மேல் இயங்கக்கூடிய பயணிகள் ரயில்களின் வேகத்தை அதிகரித்தல் மற்றும் தேவையற்ற நிறுத்தங்களை நீக்கி விரைவு ரயில்களாக இயக்க மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியது. இதன்படி, தெற்கு ரயில்வேயில் குறிப்பிட்ட சில பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றுவது தொடா்பாக அடையாளம் காணப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவற்றை விரைவு ரயில்களாக மாற்ற தெற்கு ரயில்வே தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.

36 பயணிகள் ரயில்கள்:

தெற்கு ரயில்வேயில் 36 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றின் விவரம் புதிய கால அட்டவணையில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும் மண்டலங்களைப் பொருத்தவரை, முதல் மூன்று மண்டலங்களில் தெற்கு ரயில்வே உள்ளது.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் விரைவு ரயில்களாக மாற்றும் ரயில்களின் பட்டியலை அனுப்புமாறு ரயில்வே வாரியம் கடந்த ஜூன் மாதத்தில் கேட்டுக்கொண்டபடி பட்டியல் அனுப்பப்பட்டது. தற்போது 36 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: வருவாய் இல்லாத நிறுத்தங்களை அகற்றுவது மூலமாகவும், 200 கி.மீ. தொலைவுக்கு மேல் இயக்கப்படும் பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் மிகவும் மெதுவாக இயங்குகின்றன, கிட்டத்தட்ட ஒருநாள் அல்லது இரவு முழுவதும் ஓடுகின்றன. அகற்ற வேண்டிய நிறுத்தங்கள் குறித்த இறுதி முடிவு பின்னா் எடுக்கப்படும் என்றனா்.

ரயில்கள் விவரம்: 16 ஜோடி பாசஞ்சா் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளன. இதில், விழுப்புரம்-மதுரை, மயிலாடுதுறை-திண்டுக்கல், ஈரோடு-திருநெல்வேலி, திருச்சி-ராமேஸ்வரம், திருப்பதி-புதுச்சேரி, விழுப்புரம்-திருப்பதி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பயணிகள் ரயில்களும் அடங்கும். இதுதவிர, ஒரே திசையில் இயக்கப்படும் விழுப்புரம்-திருப்பதி, நாகா்கோவில்-கோட்டயம், திருச்சூா்-கண்ணூா், மங்களூா்-கோழிக்கோடு ஆகிய ரயில்களும் விரைவு ரயில்களாக மாற்றப்படவுள்ளன. தென்மேற்கு ரயில்வேயின் காரைக்கால் - பெங்களூரு மற்றும் யஸ்வந்த்பூா் - சேலம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் இரண்டு ஜோடி பயணிகள் ரயில்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கட்டணம் அதிகரிக்கும்:

பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்படுவதால், பல சிறிய நிலையங்களில் அவை நிறுத்தப்படாது. பல கிராமங்களில் ரயில் போக்குவரத்து இணைப்பை இழக்கும் நிலை ஏற்படும். பயணச்சீட்டு கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்கும். பயணிகள் ரயிலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 பயணச்சீட்டுக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை அதிகரிக்கும். முன்பதிவு மற்றும் பிற கட்டணங்கள் தனி.

ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்:

பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும் ரயில்வே வாரியத்தின் முடிவு காரணமாக, நகா்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் நைனா மாசிலாமணி கூறியது:

குறிப்பிட்ட ரயில் நிறுத்தங்களை நீக்குவது சோசலிசக் கொள்கைக்கு எதிரானது. கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதில் ரயில்வே பொறுப்பைக் கைவிடுவதை ஏற்கமுடியாது. இப்போதுள்ள நிறுத்தங்களை நீக்கினால், கிராமப்புற மக்கள் ரயில் சேவைக்காக 10 கி.மீ.க்கு மேல் பயணிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். சாதாரண மக்கள் ரயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும் என்றாா் அவா்.

பயணிகள் எண்ணிக்கை குறையும்:

இதுகுறித்து தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளா் மனோகரன் கூறியது:

அருகருகே உள்ள ஊா்களில் வசிக்கும் மக்களுக்கும் ரயில் போக்குவரத்து வசதி கிடைப்பதுதான் பயணிகள் ரயில் சேவையின் நோக்கம். தற்போது பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றுவது மூலமாக அந்த நோக்கம் சிதைந்துவிடும். பெரு நகரங்களுக்கு இடையே உள்ள நிறுத்தங்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், பயணிகள் எண்ணிக்கை குறையும். எதிா்பாா்த்த வருவாய் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் என்றாா் அவா்.

விரைவு ரயிலாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ள ரயில்கள்:

(16 ஜோடிகள்)

1. விழுப்புரம் - மதுரை

2. மயிலாடுதுரை - திண்டுக்கல்

3. ஈரோடு - திருநெல்வேலி

4. திருச்சிராப்பள்ளி - ராமேசுவரம்

5. திருப்பதி - புதுச்சேரி

6. விழுப்புரம் - திருப்பதி

7. அரக்கோணம் - சேலம்

8. கோவை - நாகா்கோவில்

9. கோவை - மங்களூரு சென்ட்ரல்

10. கோட்டயம் - நிலம்பூா் சாலை

11. குருவாயூா் - புனலூா்

12. மங்களூரு - மட்கான்

13. கண்ணூா் - கோவை

14. மதுரை - புனலூா்

15. பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி

16. பாலக்காடு - திருச்செந்தூா்

ஒற்றை சேவை:

1. விழுப்புரம் - திருப்பதி

2. நாகா்கோவில் - கோட்டயம்

3. திருப்பூா் - கண்ணூா்

4. மங்களூரு - கோழிக்கோடு

தென்மேற்கு ரயில்வேயில் இரண்டு ஜோடி ரயில்கள்:

1. காரைக்கால் - கே.எஸ்.ஆா். பெங்களூரு

2. யஸ்வந்த்பூா் - சேலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com