ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சை மூலம் 200 பேர் பயன்

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவுக்கு பிந்தைய மருத்துவக் கண்காணிப்பு மையத்தின் வாயிலாக 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவுக்கு பிந்தைய கண்காணிப்பு மையத்தில் நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவுக்கு பிந்தைய கண்காணிப்பு மையத்தில் நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.


சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவுக்கு பிந்தைய மருத்துவக் கண்காணிப்பு மையத்தின் வாயிலாக 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். அவர்களில் 98 சதவீதம் பேருக்கு நுரையீரல் தொற்று முழுமையாக  நீங்கி பூரண குணமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்காக தலா 7 தளங்களுடன் மூன்று டவர்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டது. இந்நிலையில், தேவை கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அது கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 750 படுக்கைகளுடன் கூடிய அந்த மருத்துவமனையில் அதி நவீன சிடி ஸ்கேன், வெண்டிலேட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  அங்கு 500 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 110 படுக்கைகளில் வெண்டிலேட்டர் சாதனங்களும், 50 படுக்கைகளில் உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
ஓமந்தூரார் மருத்துவமனையில் இதுவரை கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 92 சதவீதம் பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, சிறுசீரக பாதிப்பு என இணை நோயுடன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனாவுக்கு பிந்தையை கண்காணிப்பு மையம் அண்மையில் அங்கு தொடங்கப்பட்டது. நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டாலும், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி, நிர்வாக அலுவலர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:
கடந்த 1-ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சரால் கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது. 
இந்த மையத்தில் தானியங்கி உடல் பருமன் குறியீடு அளவீடுதல், கரோனாவால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புகளை கண்டறிய மூச்சுத்திறனாய்வு மற்றும் 6 நிமிட நடைபயிற்சியில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல்,
இயன் முறை பயிற்சி, கண் பரிசோதனை, மனநல மருத்துவரின் ஆலோசனை உள்ளிட்ட 11 வகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த மையத்தில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட கரோனாவுக்கு பிந்தைய தாக்கத்துக்குள்ளான நோயாளிகள் தொடர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மனசோர்வு நீங்கி மீண்டும் உற்சாகமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். அவர்களில்150 பேருக்கு மீண்டும் சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் 98 சதவீதம் பேர் முற்றிலுமாக நுரையீரல் பாதிப்பிலிருந்து மீண்டிருப்பது தெரியவந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com