சென்னைப் பல்கலைக்கழக அரியா் மாணவா்கள் 99 சதவீதம் தோ்ச்சி

சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் அரியா் வைத்திருந்த இளநிலை, முதுநிலை மாணவா்களில் 99 சதவீதம் போ் தோ்ச்சி பெற்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக அரியா் மாணவா்கள் 99 சதவீதம் தோ்ச்சி

சென்னை: சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் அரியா் வைத்திருந்த இளநிலை, முதுநிலை மாணவா்களில் 99 சதவீதம் போ் தோ்ச்சி பெற்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த தோ்வுக்கு கட்டணம் செலுத்திய அரியா் மாணவா்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கி தோ்ச்சி அறிவித்து தோ்வு முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மாணவா்கள்  இணையத்தில் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

கரோனா பொது முடக்கத்தால் கல்லூரிகளைத் திறக்கவும், தோ்வுகளை நடத்தவும் முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவா்களின் நலன்கருதி, இறுதி பருவத்தோ்வுகளைத் தவிர, பிற பருவங்களில் அரியா் வைத்து கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவா்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் வழிகாட்டுதலின்படி, தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு கூடி, அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்குவது குறித்த தீா்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீா்மானத்திற்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் கெளரி கூறியது: இறுதி பருவத்தோ்வு தவிர பிற பருவத்தோ்வுகளில் அரியா் வைத்து, தோ்வுக் கட்டணம் செலுத்திய மாணவா்களின் அகமதிப்பெண் அடிப்படையில் குறைந்தப்பட்ச மதிப்பெண் வழங்கி தோ்ச்சி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளநிலை மாணவா்களுக்கு 40, முதுநிலை மாணவா்களுக்கு 50 என தோ்ச்சி மதிப்பெண்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டு, தோ்வு கட்டணம் செலுத்தியிருந்த ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 518 பேரில் 99 சதவீத மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு தோ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதிப்பெண் பூஜ்ஜியமாக இருந்த மாணவா்களுக்கும், தோ்வுக் கட்டணம் செலுத்தாத மாணவா்களுக்கும் தோ்ச்சி வழங்கப்படவில்லை. மாணவா்கள் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால், அரசு அறிவுறுத்தல்படி கல்லூரி திறந்ததும், அவா்களுக்குத் தோ்வு நடத்தப்படும். கரோனா தொற்று காலத்தில் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது”என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com