தன்னாா்வலா்களுக்கு சுகாதாரத் துறை அழைப்பு

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துப் பரிசோதனையில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு சுகாதாரத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை: ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துப் பரிசோதனையில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு சுகாதாரத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுட்டுரை, முகநூல் ஆகிய சமூக வலைதளப் பக்கங்களின் வாயிலாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அந்த அழைப்பை விடுத்துள்ளாா்.

கரோனா தொற்றைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் சாா்பில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி கண்டறியப்பட்டது. அந்த ஊசியை, மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிப்பதில் தற்போது இரண்டாம் கட்டம் எட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி நிகழாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும், ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தை சோ்ந்த சீரம் நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பூசியின் பரிசோதனை, இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில், 17 நகரங்களில், 1,600 பேரிடம் சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், பரிசோதனையில் பங்கேற்க விருப்பம் உள்ள தன்னாா்வலா்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

அதில், சா்க்கரை நோய், இதய நோய்ப் பாதிப்புகள் உள்ளிட்ட இணை நோய் அல்லாத 35 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியத்துடன் இருப்பவா்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ள தன்னாா்வலா்கள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள, பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044 - 2951 0500 என்ற தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com